ஞாயிறு, 2 மே, 2010

யாழ்ப்பாணம் முன்னேறக் கூடாதென விரும்பினால் இங்குள்ள நாங்கள் என்ன பாழடைந்த வாழ்க்கையா வாழ்வது?

“சங்கிலியன் ஆட்சி செய்தான் என்பதற்காக அந்த நிலத்தில் ஒன்றும் செய்யடியாதென்றால் மன்னாரிலும் எதனையும் செய்யமுடியாதே? வடமாகாணம் அனைத்தையும் சங்கிலிய மன்னன் ஆண்டான்தானே. அவன் ஆட்சி செய்த இடம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று இன்று கூறுவோர் ஏன் கடந்த காலங்களில் அதனைச் செய்யவில்லை.
சங்கிலியன் ஆண்ட பிரதேசம், அவனது வரலாற்றுத் தடம் கொண்ட பிரதேசம் என்றெல்லாம் கூறப்படும் இந்தப் பிரதேசத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட கடந்த காலங்களில் பேணிப்பாதுகாக்கவில்லையே'' என்று கேள்வி எழுப்புகிறார் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா.
நல்லூரில் உல்லாசப் பயண ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அதற்கான அனுமதியை யாழ். மாநகர சபை வழங்கவுள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இந்தப் பிரதேசம் சங்கிலியன் மன்னன் ஆண்ட பிரதேசமென கூறப்படுகிறது. ஆனால், இந்த நிலமெல்லாம் போர்த்துக்கேயர் காலத்திலேயே தனியாரின் கீழ் வந்துவிட்டன.    அத்துடன் சங்கிலியன் ஆண்ட பிரதேசம், அவனது வரலாற்றுத் தடம் கொண்ட பிரதேசம் என்றெல்லாம் கூறப்படும் இந்தப் பிரதேசத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட கடந்த காலங்களில் பாதுகாக்கவில்லை.

ஆனால், இன்று நாங்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகத்தான் இவ்வாறு எங்கள் மீது குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றனர்.  
குறிப்பிட்ட இந்தக் காணி 26.04.2006 இல் தனியார் ஒருவரால் இன்னொரு தனியர்ருக்கு விற்கப்பட்டுள்ளது, இந்தக் காணி விற்பனைக்கும் யாழ்.  மாநகரசபை நிர்வாகத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை.

காணிகளை யார் யாருக்கும் விற்கலாம். இந்த ஹோட்டலைக் கட்டுவது தொடர்பில் ஒரு திட்ட அறிக்கையை எமது நகர சபையின் அங்கீகாரத்துக்காக ஒப்படைத்துள்ளவரும் ஒரு தமிழர்தான்.

இவ்வாறானதொரு நிலையில் இந்த ஹோட்டல் நிர்மாண விவகாரம் இன்று பலராலும் சர்ச்சைக் குரியதாக நோக்கப்படுகிறது. ஆகவேதான் நாம் இது தொடர்பில் பல தரப்பினரதும் கருத்தறியத் தீர்மானித்துள்ளோம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தொல்பொருளியலாளர்கள், புத்தி ஜீவிகள், இந்தப் பிரதேச பொதுமக்களையும் கலந்து கொள்ளச் செய்து அவர்களின் கருத்துகளை அறிந்து இறுதி முடிவை எடுக்கவுள்ளோம்.

சங்கிலியன் ஆண்டான் என்பதற்காக அந்த நிலத்தில் ஒன்றும் செய்ய முடியாதென்றால் மன்னாரிலும் ஒன்றும் செய்ய முடியாதே? வட மாகாணம் அனைத்தையும் சங்கிலி மன்னன் ஆண்டான் தானே.   இது பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறுவோர் ஏன் கடந்த காலங்களில் அதனைச் செய்யவில்லை.
சிங்கப்பூலிருந்து வந்த ஒரு தூதுக் குழுவினர் நேற்று முன்தினம் என்னைச் சந்தித்த போது யாழ்ப்பாணம் முன்னேறக்கூடாதா என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்.  ஆனால், வெளிநாடுகளில் வசித்து வருவோர் அங்கிருந்து கொண்டு யாழ்ப்பாணம் முன்னேறக் கூடாதென விரும்பினால் இங்குள்ள நாங்கள் என்ன பாழடைந்த வாழ்க்கையா வாழ்வது? நாங்களும் முன்னேற வேண்டும். நல்லவைகளைப் பார்க்க வேண்டும். ஒரு இடம் வளரும் போதுதான் புற்றரைகளாகக் காணப்படும் அத்தனை இடங்களும் வளரும்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கைச் சிங்கள மக்கள் வரக்கூடாதென சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறிகிறேன்.     இதனை நாம் அனுமதிக்கமுடியாது. இது ஒரு ஐக்கியப்பட்ட இலங்கை. எவரும் எங்கும் வரலாம் எங்கும் போகலாம். இப்படி இங்கு வரக்கூடாதெனக் கூறுவதன் பிரதிபலிப்பு எங்கு போய் பாதிப்பை ஏற்படுத்தும்? அதனைத்தான் இவர்கள் விரும்புகின்றனர். இனவாதச் சக்தி ஒன்றே இவ்வாறு இங்கு செயற்படுவதாக நாம் நம்புகிறேன்.
யாழ்ப்பாணத்துக்குப் பெரும்பான்மை இனம் வரக்கூடாது, கோயில்களுக்குச் செல்லக்கூடாத தென்கிறார்கள்.  ஆனால் கொழும்பில் உள்ளவர்கள் மட்டும் எல்லோருடனும் வாழலாம் எங்கும் செல்லலாம். இதில் என்ன நியாயம் உள்ளது? இதனை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்மகள், தமிழ்க் காலாசாரத்தைப் பேணி வருபவள். வெளியில் தமது கலாசாரத்தை விற்றுக் கொண்டு பிழைப்பு நடத்து வோரின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படப்போவதில்லை. பெரும்பான்மை இனம் இங்கு வரக்கூடாதென எவராலும் சொல்ல முடியாது. அது சட்டத்துக்கே புறம்பானது. எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக