திங்கள், 3 மே, 2010

24மணிநேரமும் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் ரோந்து;

வடக்கில் கப்பம், ஆட்கடத்தலை முறியடிக்க விசேட பாதுகாப்பு; புலனாய்வு குழுவும் நியமனம்
24மணிநேரமும் மோட்டார் சைக்கிளில் பொலிஸ் ரோந்து; நகைகள், பணத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டுகோள்
வடக்கில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் கப்பம் கோரல், ஆட்கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கென விசேட குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் லியூகே தினகரனுக்குத் தெரிவித்தார்.

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், குற்றச் செயல்கள் இடம்பெறும் நேரத்தை அவதானித்து அதனை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் ரோந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள தென்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு பொலிஸார் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று, இன்று தனது தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்காக வட மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள் ளனரென்றார்.

மக்களுக்கு எவ்வாறான சேவைகளை மேலும் வழங்குவது, மக்கள் மத்தியில் பொலிஸார் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்ப்பது, குற்றச் செயல் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாணத்திலுள்ள மக்கள் தங்க ளிடம் உள்ள தங்க ஆபரணங்கள், பெருந் தொகையான பணங்களை வங்கிகளிலோ அல்லது வங்கிப் பெட்டகங்களிலோ பாதுகாப்பாக வைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பதன் மூலம் கப்பம் கோரல், கொள்ளை, பணத்திற்காக ஆட்கடத்தல் போன்ற சம்பவங்களை முற்றாக தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வட மாகாணத்தை நோக்கி தென்பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தற்போது வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அதி கரித்துள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் பணப் புழக்கம் காணப்படுகின்றது. இதனை அவதானித்த சிலரே குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.

பொலிஸாரும், இராணுவமும் போதிய பாதுகாப்பை வழங்கி வந்தாலும் தங்க ளையும், தங்களது சொத்துக்களையும் தாங்கள் முதலில் பாதுகாக்க முன்வரவேண்டும். எனவே இந்த அடிப்படையில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றார்.

இது தொடர்பாக வட மாகாணத்திலுள்ள வங்கிகளுடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் இதனை பல்வேறு முறைகளில் பொதுமக்க ளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும் தெரிவித்தார். (ரு-ஈ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக