ஞாயிறு, 2 மே, 2010

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்த் திரைப்படங்களின் விநியோகஸ்தர்களாக இருப்பவர்கள்

இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடாத்த தென்னிந்தியத் திரையுலகமும் சில அரசியல்வாதிகளும் அதற்குக் காட்டும் எதிர்ப்பு உண்மையான அக்கறையின் வெளிப்பாடல்ல
பத்தாவது இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நடத்து வதற்கான ஏற்பாடுகள் பற்றியும் தென்னிந்தியத் திரையுலகமும் சில அரசியல்வாதிகளும் அதற்குக் காட்டும் எதிர்ப்பு பற்றியும் விரிவான கட்டுரையொன்று எதிர்ப்பக்கத்தில் வெளியாகியிருக்கின்றது.
இலங்கைத் தமிழ் மக்களுடனான சகோதரத்துவ உறவை வெளிப் படுத்துதல் என்ற தோரணையில் இவர்கள் காட்டும் எதிர்ப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடல்ல.

தமிழ் சினிமா உலகப் பிரமுகர்கள் தங்கள் சுயநல நோக்கத்துக்காக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்கு இப் பிரச்சினை பற்றிய புரிகை சிறிதளவும் இல்லை.

தமிழ் மக்களுடனான ஒருமைப்பாடு என்ற போர்வையில் இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலங்கையில் தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியன என்பதற்கு அண்மைக்கால துயர சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

மிகப் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்து தமிழ்த் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. முன்னைய காலங்களைப் போல, இந்தி யாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் மாத்திரம் இத்திரைப் படங்கள் திரையிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத் தில் அரைவாசியைக் கூடப் பெற முடியாது.

திரைப்படங்களுக்கான தயாரிப்புச்செலவு பெருமளவில் அதிகரிக்கும் அளவுக்குத் திரைப்படத் துறையில் போட்டி நிலவுவதும் புதிய பட சீ.டீக்கள் சம காலத்திலேயே சந்தைக்கு வருவதும் இதற்கான பிரதான காரணங்கள்.

அமெரிக் காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதன் மூலமே தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் லாபமீட்ட முடிகின்றது.

அங்கிருந்து கிடைக்கும் டொலர்களும் யூறோக்களும் இவர்களின் வருவாயை அதிகரிக்கின்றன. சுருக்கமாகக் கூறுவதானால் அமெரிக் காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகம் உயிர் வாழ்கின்றது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தமிழ்த் திரைப்படங்களின் விநியோகஸ்தர்களாக இருப்பவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள். இவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களின் சுயநலத் தேவை.

இலங்கைத் தமிழருடனான ஒருமைப்பாடு என்ற பெயரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் அடிதடிகளும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின் றன.

தமிழ்த் திரையுலகம் எவ்வளவுக்கு ஐரோப்பிய விநியோகத்தில் தங்கியிருக்கின்றது என்பதை அண்மைய உதாரணமொன்றிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. விஜய்யும் அதை அங்கீகரிக்கும் வகையில் சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தினார்.

விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களை ஐரோப்பாவில் திரையிடப் போவதில்லை என்று அங்குள்ள விநியோகஸ்தர்கள் கூறியதும், தான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை என்று அவர் அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர் தொடர்பாகத் தமிழ்த் திரையுலகம் எடுக்கின்ற கடுங்கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கான உண்மையான காரணத்தை இதிலிருந்து அறியலாம்.

தமிழ்த் திரையுலகுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் எப்போதும் புலி ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள். இவர்களுக்குத் தமிழகத்தில் மக்களாதரவு இல்லை என்பதற்குத் தேர்தல் முடிவுகள் சான்று.

புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை இலங்கையில் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து தமிழகத் திரையுலகமும் புலிசார்பு அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்காகவே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

புலிகளின் ஆதரவாளர்களாகப் போட்டியிட்ட கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அடியோடு நிராகரித்துவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்களின் பிரச்சினையையும் மனநிலையையும் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக