புதன், 14 ஏப்ரல், 2010

பியசேன : இனவாதத்திற்கு அப்பாற்றட்ட தூய பௌத்த சிங்களவன். - புன்னியாமீன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளரான பி.எச்.பி. பியசேன 11,130 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக சிங்களவர் ஒருவர் தெரிவாகியிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.

தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த தெவிநுவர எனுமிடத்தை பிறப்பிடமாகக் கொண்ட பொடிஅப்பு 1948ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அக்கறைப் பற்று பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து அக்கறைப்பற்று பிரதேசத்தின் சின்னம்மாள் எனும் யுவதியை திருமணம் செய்துகொண்டு இப்பிரதேசத்திலே வாழ்ந்து வந்ததுடன் 7 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஸ்ரீலங்கா பொலிஸில் சமயல் செய்பவராக தனது தொழிலை ஆரம்பித்த இவரது கடைசிப் பிள்ளைதான் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள பியசேன.

அக்கறைப்பற்று சிங்கள வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பியசேன் பின்பு அக்கறைப்பற்று ஆர்.கே. மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழியில் தனது தாயின் விருப்பத்திற்கிணங்க கல்வி பயின்றார். தமிழரின் கலாசாரத்திற்கிணங்க வாழ வேண்டும் என்றால் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று பியசேனவின் பெற்றோர் விரும்பியதனாலேயே இவர் தமிழ்மொழியில் கல்வி பயின்றார்.

1984ஆம் ஆண்டில் அக்கறைப்பற்று நகரில் பியசேனவின் சகோதரரான சோமசிரி ஈரோஸ் அமைப்பினால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார் என்ற அடிப்படையிலேயே இவர் கொலை செய்யப்பட்டார். இப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதல் கொலையும் இதுவேயாகும். இது தொடர்பில் பியசேன தற்போது வேதனைப்படுபவராகவே காணப்படுகின்றார்.

அக்கறைப்பற்று சிரிதம்மரத்ன சிங்கள வித்தியாலய அதிபர் பி.எச்.பி. பியதாஸ பியசேனவின் சகோதரர்களுள் ஒருவராவார். 'எனது சகோதர, சகோதரிகள் தனது பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருப்பது சிங்களப் பெயர்களாகும். இருப்பினும், எனது பிள்ளைகளுக்கு நான் தமிழ் பெயர்களையே வைத்துள்ளேன். நான் சிறு வயதில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும்போது சிங்களவன், சிங்களவன் என்றே என் சக மாணவர்கள் என்னைக் கேலி செய்வார்கள். அதனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை நான் வைத்தேன். நாங்கள் சிங்களவர்களாக இருந்ததினால் அக்காலகட்டத்தில் அக்கறைப்பற்று பிரதேசத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. எனது சகோதரன் கொல்லப்பட்ட காலத்தில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டியேற்பட்டது. இந்நிலையில் எனது சொந்தக் கிராமத்திற்கு மீள முடியவில்லை. ஏனெனில், அக்காலகட்டங்களில் எனது சொந்தக் கிராமத்திலும் ஜே.வி.பி. அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. மிகவும் சிரமத்துடனும் பிரச்சினைகளுக்கு மத்தியிலுமே அக்காலத்தில் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது' என பியசேன குறிப்பிடுகின்றார்.

சிறு வயது முதலே பொலிஸில் ஏ.எஸ்.பி. ஆக வேண்டுமென்று தனக்கு கனவு இருந்ததாகவும் பிரச்சினைக் காலங்களில் பொலிஸாரின் கண் எதிரிலே கொலைகள் இடம்பெற்ற போது தனக்கு பொலிஸ் பதவி பற்றிய ஆசை விட்டுப் போய்விட்டதாகவும் கூறும் இவர் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து வியாபாரமொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை இறக்கும்வரை தனது பிறப்பிடத்தில் வாழ்ந்த எந்த உறவுகள் பற்றியும் இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையாரின் சகோதரர் பீரிஸ்அப்பு என்றொருவர் இருந்துள்ளார். தந்தையார் இறந்த பின்பு இவரையும் இவரது உறவுகளையும் சந்திக்க வேண்டுமென பியசேன தெவிநுவரைக்கு சென்றுள்ளார். இருப்பினும், பியசேனவால் தனது தந்தையின் எந்தவொரு உறவினரையும் தேடிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஒருநாள் மாத்தறையிலிருந்து சிமெந்து ஏற்றிவந்த ஒரு லொறியில் பி.எச்.பி. பீரிஸ்அப்பு மற்றும் பொடியப்பு சகோதரர்கள் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நப்பாசையில் அந்த லொறி சாரதியுடன் உரையாடியதன் ஊடாக தனது தந்தையின் சகோதரரின் இருப்பை இவர் தேடிக் கண்டறிந்துள்ளார். அதன் பின்பு தனது தாயின் மரணத்தின்போதே தனது தந்தையின் உறவினர்கள் வந்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாத்தறையிலுள்ள தனது தந்தையின் உறவினர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இவர், 1995ஆம் ஆண்டு ஆலயடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாவதற்காக தமிழரசுக் கட்சியூடாக போட்டி போட முற்பட்டார் அவ்விடயம் நிறைவேறாத போது அத்தருணத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டிருந்த ஈபிடிபி யினருக்கு எதிராக சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு 5800 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவானார். இருப்பினும் பிரதேச சபையின் தலைவர் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக உப தலைவர் பதவியே கிடைத்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து கேட்டு விலகிக் கொண்டார். 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் அவருக்கு கட்சி பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை.

2006 பிரதேசசபை தேர்தலின்போது சிக்கல்மிகு சூழ்நிலையொன்று பிரதேசத்தில் உருவாகியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பாக இவருக்குப் போட்டியிடும் வாய்ப்புக் கிட்டியது. இத்தேர்தலில் 6800 வாக்குகளைப் பெற்ற பியசேன ஆலயடிவேம்பு பிரதேசசபைத் தலைவராக தெரிவாக்கப்பட்டார். இருப்பினும், அந்தப் பதவி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. சிங்களவர் ஒருவரான பியசேனவுக்கு தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டாமென்ற பல அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பியசேனவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு விடுதலைப் புலிகளின் நெருக்கடிகள் பிரதான காரணமாயிற்று. தலைவர் பதவியைத் துறந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்து இவர் மக்களுக்கு சேவையாற்றினார்.

இச்சந்தர்ப்பத்தில் இடைக்கிடையே பிரதேச சபையில் தலைவர் பதவியை இவர் கோரி வேண்டுகோள் விடுத்தபோதும்கூட ஜனாதிபதித் தேர்தலையடுத்து அது பற்றி சிந்திக்கலாம் என கூட்டணித் தலைமைத்துவம் இவரிடம் கூறியுள்ளது. இந்நிலையில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததினால் இவரின் வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் நியமனப் பத்திரம் கோரப்பட்ட நேரத்தில் பியசேனவின் பெயர் திகாமடுலை தேர்தல் மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், அச்சந்தர்ப்பத்தில் அவருக்குத் தேவைப்பட்டது பாராளுமன்றத்துக்குச் செல்வதற்காகவல்ல. மீண்டும் பிரதேசசபை தலைவராகுவதே. மார்ச் 1ம் திகதி பிரதேச சபைத் தலைமைப் பதவியைப் பெற்றுத் தருவதாக தமிழ் கூட்டணியின் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தபோதிலும்கூட அது அவருக்குக் கிடைக்கவில்லை. தேர்தலின்போது சுவரொட்டிகள், பெனர்கள், நோட்டிஸ்கள் போன்றவற்றை தனது சொந்த செலவில் அச்சிட்டுத் தருவதாகவும், தனக்கு பிரதேசசபை தலைமைப்பதவியை தரும்படியும் மீண்டும் மீண்டும் இவர் கோரியுள்ளார். அதற்கு கூட்டணியினர் எந்தவித உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. இந்நிலையில்தான் தனது கட்சிக்கு மாத்திரமல்ல, தனது விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இவர் தீவிரமாக செயற்பட்டார்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டணி சார்பில் ரோமியோகுமாரி, கிருஸ்ணமூர்த்தி ஆகிய வேட்பாளர்கள் இருவரும் பியசேனவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறைக் காட்டியுள்ளனர். அதேநேரம், சிங்களவரான பியசேனவுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமெனவும் அவர் வெற்றிகண்டால் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரெனவும் கடுமையான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பின்னணியிலேயே பியசேனவின் பாராளுமன்ற தேர்தலுக்கான போட்டி அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பு பியசேனவின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு 4 ஆசனங்களும், ஐ.தே.முன்னணிக்கு 2 ஆசனங்களும், தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனமும் மாத்திரமே கிடைத்தது. தமிழ் கட்சியொன்றில் தமிழ் பிரதேசத்தில் போட்டியிட்டு 11,130 வாக்குகளைப் பெற்று இந்த சிங்கள பிரதிநிதியால் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு கிட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

'எனது தந்தை இன்று இருந்திருந்தால் அவர் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். எனது தந்தை இறக்கும்போது என் தந்தையின் உறவுகளைப் பற்றி எவ்விதத்திலும் நான் அறிந்திருக்கவில்லை. தந்தையின் இறப்பின் பின்பே நான் என் உறவுகளை இனங்கண்டு கொண்டேன். இன்று நான் பாராளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றேன்' என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார் பியசேன.' ஏழை மக்கள் துயரமடைகின்றனர். மந்திரிகள் அரசர்கள் போல் நடமாடுகின்றனர். நல்ல அரசு இருக்கின்றது. நல்ல அரசாங்கம் இருக்கின்றது. இருப்பினும், மக்கள் துயரமடைகின்றனர். தூய பௌத்த சிங்களவன் இனவாதத்துக்கு அப்பாற்பட்டவன். தமிழரசுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கபட்ட நான் இனவாதத்துக்கப்பால் நின்று மக்களுக்கு சேவை செய்வேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக