சனி, 13 ஜூன், 2026

சுயமரியாதை பற்றி 1929 யிலேயே வெளிவந்த நூல் - C.P.R.பாரதி எனும் திரு.ஸி.பி.ராஜகோபால பாரதி.

May be an image of ‎text that says "‎ஓம். சுயமரியாதைச் சமாசச் சடங்கு விளக்கம். ማድ பலநண்டபர்களுடைய வேண்டுகோளெக்கிணக்கி C.P.R. P C.P R. பாரதியாரவர்கள் பார இயற்றியது. وفنه "போங்கும் மங்களம் எங்கும் தங்குக" محمش இிரிசிரபுாம் ஜனனுகல ஒனுனகல.ச்சுக்கூடம் வகுல வஅச்சுக் அுகு ச்சுக்கூடம் கூடம் விஜல அணு 3. 1929.‎"‎
May be an illustration of text that says "ရ် பி.ராஜகோபாலபரர ហ பாஜகோபால ဆ် பாரதி"

 Dhinakaran Chelliah  ·   :  சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்
அங்கிங் கெனாதபடி எனத்தொடங்கும்  தாயுமானவரின் பாடலையும், ‘ஏகமாய்ப் பலவாய்’ எனத்தொடங்கும் அ.சிவப்பிரகாசரின் பாடலையும்,’உலகம் யாவையுந்’ எனத்தொடங்கும் கம்பனின் பாடலையும்,’பூநுலாய வைந்துமாய்’ எனத்தொடங்கும் திருமழிசையாழ்வாரின் பாடலையும்  கடவுள் வாழ்த்தாக நூலிற்கு வைத்துள்ளார் ஆசிரியர்  C.P.R.பாரதி எனும் திரு.ஸி.பி.ராஜகோபால பாரதி.
இந்நூலின் பெயர் ‘சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்’ ஆகும். 
1929 ல் வெளிவந்த நூல்.
நீண்ட முன்னுரைக்குப் பின், சுயமரியாதை வழியில் விவாகம் எனும் மணம் எப்படி நடக்கவேண்டும் அதன் வழிமுறை விளக்கங்களை எழுதியியுள்ளார்.


அதையடுத்து ஜன்மோற்சவம் எனும் பிள்ளைப்பேறு அல்லது ஜாதகர்மம்,நாமகரணம்(பெயரிடுதல்),
அசுபம்(திதி உட்பட மரணச் சடங்குகள்),
கிரகப்பிரவேசம் எனும் புதுமனைப் புகுதல் வரை சுயமரியாதை வழியில் அந்தந்த நிகழ்விற்காக பாட வேண்டிய விருத்தப்பாக்களையும் இணைத்து விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இந்த நூல் வெளியிடுவதற்கு முன்பு ‘சர்வ வருண சமரச விளக்கம்’ எனும் நூலினை அச்சிட்டு வெளியிட்டுள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இந்த நூல் இணையத்தில் கிடைக்கவில்லை.
முன்னுரை முழுவதிலும் வருணாஸ்ரம தர்மத்தையும் அதற்குக் காரணமான ஆரியர்களையும் விமர்ச்சித்துள்ளார் ஆசிரியர்.

விக்ரஹ ஆராதனை, சமண பௌத்த அழிப்பு,சாதீய வன்மம்,அரசர்களை கைவசைப்படுத்தியது,
சாஸ்திரங்கள்,பாஷைகளால் தங்களை உயர்வாக்கிக்கொண்டது,கோயில்களை ஆக்கிரமித்தது,நானே பிரம்மம் என ஏமாற்றியது  என பிராமணர்களின் ஆதிக்கப்போக்கினை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆசிரியர். 

வைதிக விவாஹம் போன்ற சுப காரியங்களுக்கும் மரணம் எனும் அபர காரியங்களுக்கும்  மாற்றாக சமரச முறையில் மாற்றுச் சடங்கு முறைகளையும் விளக்கியுள்ளது மிகவும் சிறப்பு.
வைதிக சடங்குகளுக்கு பொருத்தமான மாற்று வழிசடங்குகளை ஆசிரியர் தந்துள்ளார். 
பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் விவாதத்திற்கு உரியவை. ஆனால் 1929 களில் தொலைநோக்குப் பார்வையில் சுயமரியாதை வழியில் சடங்குகளை வைதிகச் சடங்குகளைக்கு மாற்றாக தந்துள்ளது பாராட்டத்தக்கதே.
ஆசிரியரின் முன்னுரை முக்கியம் எனக் கருதி அதைக் கீழே தருகிறேன்,
சுயமரியாதைச் சமரசச் சடங்கு விளக்கம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முன்னுரை
^^^^^^^^
மக்கள் பல நூற்றாண்டுகளாய் வருணாச்ரம தர்மம் என்ற பெயரால் போலிப் பிராமணர் தங்களுக்குத் தாங்களே கேடுவிளைவித்துக்கொண்டதோடு நிற்காமல், பொது பாடுபட்டுத்தேடிய பொருளைக் கவரவேண்டி, ஆதாரமற்ற பல சாஸ்திரங்களாலும் கருடபுராணமென்னும் போலிக் கட்டுரையாலும் பொய்ச்சடங்குகளையும் பகட்டும் வடமொழி மந்திரங்களையும் நாட்டில் புகவிட்டு, ஜனங்களை அஞ்ஞானக் கடலில் ஆழ்த்தி, இதுகாறும் நய வஞ்சகத்தால் நாட்டைப் பாழ்படுத்திவரும் மோசடிகளை யுணர்ந்த பல ஞானிகள், மேதாவிகள், ஆசார சீர் திருத்தக்காரர்கள் போதனைகளால், சமத்துவம், சகோரத்துவம் சுயேச்சை சுயமரியாதை என்ற தத்துவங்கள் தலை எடுத்தன. அதன் பயனாய், பொதுமக்கள் போலிப் பிராம்மணர் புகவிட்ட மந்திர தந்திரங்களை விலக்கி, தங்களில்லங்களில் நேரிடும் சுபாசுபங்களில் உண்மையான வழியில் செய்யும் சடங்குகளெவை யென்று விளக்கும்படி நண்பர்கள் பலர் கேட்பதால் இச்சிறு நூலை அடியேன் வெளியிட்டுள்ளேன்.
2, யான் ஏற்கனவே அச்சிட்டு வெளியிட்டிருக் கும் "சர்வ வருண, சமரச விளக்கம்'' என்னும் நூலில், பல நூற்றாண்டுகளுக்குமுன் இவ்விந்து தேசத்தில் குடியேறிய ஆரியர்கள், சுதேச குடிகளாகிய திராவிட மங்கோலிய வகுப்பாரோடு ஒற்றுமைப்பட்டு திராவிட பாஷையிலும், சாஸ்திரங்களிலும் தேர்ச்சியடைந்து கலப்பு விவாகங்கள் செய்துகொண்டு பிரம்மஞ்ஞானத் தேர்ச்சியடைந்து ஜனங்களுக்கு பிரம்மபோதம் செய்துவந்ததால் உயர்பதவிகளாகிய பிராம்மணர், வேதியர், அந்தணர் என்னும் பட்டத்தை அக்காலத்தில் அடைந்து வந்தனரென்றும்,அவர்களின் பின் சந்ததியார் பூர்வ உண்மைப் பிராமணர் சேர்த்து வைத்திருந்த செல்வச் செருக்கால் மதி இழந்து, அக்கிரமச் செயல்களால் சோம்பேறி இராமர்களாகி, ஒரு யோக்கியதையு மடையாமலே பிராம்மணரென்னும் பட்டத்தைப் பரம்பரையாக்கிக்கொண்டு, யாகாதிகளைச்செய்து ஊனைத் தின்று சோமப்பூண்டில் வடித்த கள்ளையருந்தி பல ஸ்திரீகளுடன் சம்போகித்து, ஆனந்தித்திருக்குமாறு பொருள் தேடவேண்டி, பற்பல வஞ்சனைகளால் சிற்றரசர்களை ஏமாற்றியும், பல அரசர்களைச் சூழ்ச்சிகளால் கொலை செய்தும், பல சிற்றரசர்களைக் கைவசப்படுத்திக் கொண்டு பவுத்தர்களையும், சமணர்களையும் பெருவாரியாய் அழித்து வந்தனரென்றும்; பொதுமக்களைப் பல ஜாதிகளாய்ப் பிரித்து, தங்கள் மேன்மையை உயர்த்திக்கொண்டு ஜனநாயக ஒற்றுமையை அழித்துவிட்டனரென்றும், அதுவும் போதாமல் தங்கள் கட்சியை வலுப்படுத்தவேண்டி தங்கள் கொடிய பஞ்சமா பாதகத்துக்கு உடந்தையாயிருந்து ஈனத்தொழில்கள் செய்து வந்தோருக்கும் பூணூலிட்டு அவர்களைப் பிராமணராக்கி, அரசர்கள் உதவியால் கிடைத்த தர்ம பரிபாலனம் கோவில் பூஜை முதலானவைகளுக்கு அவர்களை உதவியாய் வைத்துக்கொண்டு, யாருமறியாத வடமொழிச் சொற்கள் வாயில் புகாதார்க்கும் கைச்சாடைகளாகிய தந்திரங்களென்ற பெயரால் பூஜைகள் செய்யச் சொல்லிக் கோவில்களைத் தங்களதாகவே ஆக்கிக்கொண்டு தாங்கள்
புகவிட்ட விக்ரக ஆராதனை மூலமாய் வேண்டிய பொருளை அபகரித்து வந்தனரென்றும், பொய்ப் புராணங்களை யெழுதி தங்கள் பெரியோர்களாகிய உண்மைப் பிராமணரின் கொள்கை என ஏமாற்றி ஜனங்க ளுக்கு மோட்சமார்க்கத்தை அளிக்க வல்லதென புராணங்கள் மூலம் போதித்து, பயனற்ற பற்பல சடங்குகளைச் செய்யச்செய்து அவ்வழியாலும் கபடமற்ற மக்களின் பொருளை அபகரித்து வந்தனரென்றும், இன்னமும் வருகின்றனரென்றும், அப்பொய்ப் போதனை களால், அவர்களின்பின் சந்ததியார் உண்மைத் தத்துவத்தைத் தாங்களும் மறந்து, கடவுள் ஒருவரே என்ற பேரறிவை இழந்து, சடங்குகளால் மோக்ஷம் கிட்டு மென்ற அஞ்ஞானத்தைத் தாங்களும் ஏறிட்டுக்கொண்டு ''அகம்பிரம்மாஸ்மி" நானே பிரம்மமாய் விட்டேன் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றி வருகின்றாரென்றும், பொது மக்கள் தம் அடிமை நிலைமையை ஒழிக்க வேண்டி கற்பனையான ஜாதிக் கட்டுப்பாடுகளை அறவே ஒழிக்கவேண்டுமென்றும், உண்மை ஞானத்தை எய்த வேண்டின், மானிடரைப் போன்ற உருவுள்ள விக்கிரக ஆராதனையை ஒழிக்க வேண்டுமென்றும், நாராயணன், சிவன், விஷ்ணு, என்ற பேதங்கள் பாராட்டாது, அப் பெயர்கள் எங்கும் நிறைந்து அன்புருவாகிய கடவுளைக் குறிக்குமென்று பொருள் கொள்ள வேண்டு மென்றும், ஒரே முதற்கடவுளை பூர்வ திராவிட ஞானிகள் வணங்கி வந்த வண்ணம் உருவற்ற சுயம்பிரகாசமான ஆகாய லிங்கமாய் வணங்கவேண்டுமென்றும் உண்மையான அருளுருவக் கடவுளை மனோவாக்குக் காயங்கள் ஒருமித்து, தியானம் ஆடல் பாடலால் பிரார்த்தனைசெய்து மக்கள் செய்ய வேண்டிய எச்சடங்கையும் இனத்தார் நண்பர்களுடன் கூடிச்செய்வதே உத்தமமென்றும் (வருண சமரச விளக்கத்தில்) கூறியுள்ளேன்.
3. ஒருவர் இல்லத்தில் நேரிடும் நன்மை அதாவது சந்தோஷத்தை உண்டாக்கும் நிகழ்ச்சி, சுபகாரியம் என்ற விவாகம் ஆகும். அதை நடத்தச் செய்யும் முறை விவாகச் சடங்கென்னப்படும். அவ்வில்லத்தில் நேரிடும்,தீமை அதாவது துக்கக்குறியே அசுபமென்ற பெற்றோர்களின் மரணமாகும். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உத்தரசடங்கென்னப்படும். இப் பிரதானமான சடங்குகளைச் செய்ய உண்மை உணர்வு ஏற்பட்டதின் பின்னர் ஒவ்வொருவரும் செய்ய விரும் பும் மற்ற சிறு சடங்குகளைத் தாங்களே யூகித்துக்கொண்டு செய்யும் திறமை எவர்க்கும் வாய்த்துவிடுமாகையால் அவைகளை இச்சிறு நூலில் விளக்குவது பயனற்றதே யாகும்.
4. விவாகம் என்ற மணமாவது:-
"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை"
என்ற கட்டளையின்படி இல்லறத்தை நடத்திவரும் தர்மிகளே துறந்தவர்க்கும், ஏழைகளுக்கும் இறந்தவர்க்கும் துணையாகவேண்டுமாதலால் அதுவே பெரிய தர்மமும் வாழ்க்கையுமாகும். அத்தருமத்தை எய்துவதற்கு ஓர் புருஷனும் ஸ்திரியுமே கூடி வாழ்க்கை நடத்த வேண்டியிருப்பதால், தக்க வயது அடைந்த பின்னர் அவர்கள் ஒன்றுகூடி இல்வாழ்க்கை நடத்த வேண்டி யிருக்கிறது. அவ்வில்வாழ்க்கை நலம்பெறும் பொருட்டு
இவர்களுள் ஒற்றுமையும், சமாதானமும், சமாசவாஞ்சையும் விசுவாசமும், நம்பிக்கையும், அன்பும் பெருக வேண்டும். அதை எய்தும் பொருட்டு செய்துகொள்ளும் உடம்படிக்கையே விவாகச் சடங்கென்னப்படும். இவ்வண்ணமான உடம்படிக்கை செய்துகொள்வதற்கு, தங்களைப் படைத்த ஈசுவரனும், பெற்றோரும், பந்து வர்க்கங்களும், நண்பர்களும் சாட்சியாயிருப்பது அவசியமாதலால் அவர்கள் முன்னிலையில் விவாகச் சடங்குகளைச் செய்வது அவசியமாகும்.
5. தீமை அதாவது துக்கக்குறியாகிய அசுபம் : பெற்றோர்களின் மரணகாலத்திலும் அதன் பின்னரும் புத்திரர் செய்யவேண்டிய கடமைகளை உத்தர கிரியை என்னப்படும். பெற்றோர்களுக்குச் செய்யும் கடமையாவது, தங்களை ஈன்றெடுத்த காலமுதல் அவர்கள் மரணம் வரையில் தங்களுக்குப்பட்ட பாடுகளையும், தங்கள்மேல் வைத்திருந்த அன்பு, கருணை, வாஞ்சை முதலியவைகளையும் நினைத்து அன்னார்பால் தங்களுக்குள்ள விசுவாசம் அதாவது நன்றியறிதலைப் பாராட்டி அப்பெற்றோரின் ஆன்மாக்கள் முத்திபெற வேணுமென்று ஈசுவரனுக்குச் செய்யவேண்டிய உருக்கமான பிரார்த்தனைகளே உண்மையான உத்தரச் சடங்குகளாகும். எவ்வாறெனில், பெற்றோர்கள் அன்னமய கோசமாகிய தூலசரீரத்தை விட்ட பின்னர் அவர்களின் ஆத்துமாக்கள் சூட்சும தேகத்துடன் இந்நில உலகைவிட்டு, ககனமார்க்கமாய் அந்தரலோகங்களைச் சேர்ந்து, தங்கள் தங்கள் புண்ணிய பாவத்துக்கேற்ற வாறு சுக துக்கங்களை எய்துகின்றனர். முத்தி பெறாத அவ்வான்மாக்கள், முத்தி பெறும்பொருட்டு கருணைக் கடலாகிய ஈசுவான் விசேட கடாட்சமென்ற அருளால் சூட்சம சரீரத்துடன் கூடிய ஆன்மாக்கள் நில உலகைச்சுற்றி யிருக்கும் ஆகாயத்தில் பதிக்கப்பெறுகின்றன. ஆதித்யன் (சூரியன்) தன் கிரணங்களால் ஆகாயத்தில் மங்கிக் கிடக்கிற ஆத்துமாவைக் கிரகித்து மேகத்தில் புகவிட அம்மேகபருவதம் மழை உருவ மாய் பூமியிலிறங்கி ஜலரூபமாய் உண்ணும் தானியத் துக்கு ஆதரவாயிருந்து அதனுள் பிரவேசித்து அந்த தானியம் மக்கள் சரீரத்தில் பிரவேசித்து (புகுந்து) சுக்கிலமாய்த் திரண்டு ஸ்திரி புருஷ சம்யோகத்தால் ஸ்திரீ சரீரத்தில் புகுந்து "பஞ்சம் யாவாஹு தாவா பஹ, புருஷவசசோபவந்தி " என்கிறபடி கர்ப்பமாய் பரிணமித்து அக்கர்ப்பம் பெருகி ஈசுவரனுக்கு வழி பாடுபடும்படியான மானிடப் பிறவியை எய்துகிறதென்று வேதாந்தத்தில் "பஞ்சாக்கினி வித்தை" யென்ற ஓர் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் பல சாஸ்திரங்களில் இவ்வான்மாக்கள் அதனதன் புண்ணிய பாவங்களுக்கேற்றவாறு மற்றோர் கருப்பத்தைப் பற்றிக்கொண்டு இத்தூல தேகத்தை விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சில சாஸ்திரங்களில் இச்சரீரம் பிருதிவ்யாதி பஞ்சமகா பூதங்களால் ஆக்கப்பட்ட தென்றும், சூட்சும தத்துவங்களாலாய மனிதன், நாளடைவில் அல்லது நோயால் பஞ்சபூத ஏற்றக் குறைவுகளேற்பட்டு மாண மடைந்தபின் அப்பஞ்ச பூதங்கள் மகா பஞ்சபூதங்களோடு கலந்து விடுகிற தென்றும் ஜனனமென்பது மனிதன் ஜீவனோடிருந்த காலத்தில் ஜெனிப்பித்த மக்களென்றும் கூறப்பட்டுள்ளது. இப்பாகுபாடுகள் எவ்வாறாயினுமாகுக. இவ் வன்னமய கோசமாகியஸ்தூலதேகத்தை விட்டுவிட்ட சூட்சும ஆன்மாக்களுக்கு இவ்வுலக ஆகாரம், வண்டி,வாகனம், பாதரக்ஷை, வஸ்திரங்கள், ஒளஷதங்கள் முதலானவைகளின் அவசியம் விடப்பட்டுப் போனதால் ஆன்மாக்களின் பேரால் போலிக்குருக்களுக்குச்செய்யும் தானங்களும், வெகுமானங்களும், லஞ்சங்களும் ஆன்மாக்களை ஒருக்காலும்போய்ச் சேராதென்பது உண்மைத் தத்துவமாகும். ஆகையால் பல நூற்றாண்டுகளாய் போலிக் குருக்களும், புரோகிதர்களும், பிறர் சொத்தைக் கவரவேண்டி பித்தலாட்டங்களும், மோசடிகளும் பாசாங்குகளும் செய்து கபடமற்ற மக்களை ஏமாற்றி தாங்களும் கெட்டுப்போவதால் அவர்களைக் களைந்து விடுதலே இருதிரத்தினரும் விரும்பத்தக்க யாகும். கடமை
6. இப்போலிக் குருக்களைக்களைந்த பின்னர் எவரைக் கொண்டு விவாக உடன்படிக்கைகளையோ, சவச்சடங்குகளையோ செய்யவேணுமென்ற கேள்விபிறக்கும். பூர்வ திராவிடர்கள் செய்து வந்ததுபோல, இக்காலத்தும் அனேக மக்கள் கூட்டத்தினர், தங்கள் குடும்பத்தலைவர்கள் அல்லது குலத்தலைவர்கள் அல்லது நண்பர்களைக் கொண்டு இந்நூலில் கூறியவண்ணமோ அல்லது மாறுபட்டோ சொல்லச்சொல்லி, தாங்களும் மனோவாக்குக் காயங்களால் அன்புநிறைந்த உருகியமனதோடு கடவுளைப் பிரார்த்தனை செய்வதே உத்தம சடங்குகளாகும். சடங்குகள் முடிந்தபின் சடங்கில் சம்மந்தப்பட்டவர்கள், பந்துக்கள், ஏழைகள் முதலானவர்களோடு கூடியுண்பதோடு ஏழைகளுக்கு தங்கள் சக்திக்கிசைந்தவாறு சகல தானங்களும் ஈசுவரன் பேரால்செய்து அவர்களை மகிழவைப் பதே மிக மிக உத்தம காரியமாகும். சடங்குகளின் உண்மைத்தத்துவமும் இதுவே.
7. தாங்கள் சொல்லும் மந்திரங்களின் பொருளை அறியாத போலிப்புரோகிதரிடம் நாளிதுவரை சடங்குகளைச்செய்துகொண்டு இன்னமும் அவ்விதமான சடங்குகளில் பற்றுடையோருக்கும், புண்ணியாவசனம்,ஒமத்தீ வளர்த்தல், அசேதனங்களாகிய நவக்கிரகங்களைப்பூசிப்பதில் பற்றுள்ளோருக்கும் சொல்லப்புகுவது யாதெனில், அணுவுக்குள் அணுவாயும், நீருக்குள் நீராயும், உயிருக்குள் உயிராயும், கரந்தசில்லிடந்தோறும், இடந்திகழ் பொருள்தோறும் கரந்து எங்கும்பரந்து வியாபித்து சுயம்பிரகாசமான எல்லாம்வல்ல இறைவரை உருகியமன தோடுசெய்யும் பிரார்த்தனையே வலுவுள்ள மந்திரமாகு மென்றும்,புரோகிதர்சொல்லும் பொருத்தமும் பக்தியுமற்ற மந்திரங்களால் எவ்விதபயனும் உண்டாகாதென்றும் உறுதிகூறுவோம்.
ஈண்டுக் கூறப்போகும் சடங்குமுறைகள் இப்போது புதிதாகக் கற்பிக்கப்படுவனவல்ல. ஆரியமத உண்மைச் சித்தாந்தங்களையும், தத்துவ சாஸ்திரங்களையும், இப்போது சிறப்பாய் வழங்குகிற பலவகையான சமயங்களுடைய கோட்பாடுகளையும் சந்தேக விபரீதங்களற உணர்ந்து, இந்துபைபிள் என்ற ஆரியசத்திய வேதமென்னும் நூலை நமது நாட்டுக்கு உபகரித்த கோயமுத்தூர் ஸ்ரீமான் பகடால நரசிம்முலு நாயுடு அவர்களும் அவரைச் சார்ந்த கூட்டத்தினரும் கொண்டாடிவந்த சடங்கு முறைகள் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்களால் நாளிது வரையில் கைக்கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவைகளையே ஒருவாறு தொகுத்து யாம் ஈண்டு விளக்குகின்றோம்.
குறிப்பு:- விவாகம் செய்வதற்காக ஏற்படுத்தும் வேதிகை (மணவறை)யில் "முகூர்த்தக்கால்" என்று தமிழரும், பாலகம்பம் என்று தெலுங்கரும் ஓர் பாலுள்ள மரக்கிளையை மணவறையில் கீழ்புறம் நாட்டுதலும், நவ தானியங்களை தண்ணீரில் ஊரவைத்திருந்து மணவரை ஓரத்தில் தண்ணீர்நிறைந்த ஓர்புது மண்பானையின் அடிப்பக்கத்தில் செம்மண்கொட்டி அதன்மேல் தானியமுளைகளை வளரவிடும் வழக்கமும் உண்டு. இதன் உண்மை யென்னவெனில் ஸ்ரீபுத்தபிரானுக்கு விவாகம்செய்ய எத்தனித்த காலத்தில் பர்வதராஜன் என்ற பெயர்கொண்ட ஓர் மன்னனின் சுபுத்திரியாகிய உமையென்னும் வயதடைந்த கன்னிகையானவள், எவர் பட்டுப்போன மரக் கட்டையையும் வருத்ததானியத்தையும் தம்ஸ்பரிசத்தால் முளைக்கச் செய்வரோ அவரைக் கணவராக வரிப்பேனென்று சுயம்வரம் நாட்டியதற்கிணங்க புத்தபிரான் அவ்வண்ணம் செய்தார். அச்சரிதத்தை மறவாது புத்தர்கள் மேற்கூறியவண்ணம் செய்துவந்ததை இந்நாட்டுத் தமிழ் தெலுங்கு மக்களும் பின்பற்றிவருகின்றனர். இக் காலத்தில் அம்மதத்தைப் பின்பற்றாதார்க்கு அச்சடங்கு பயனற்றதெனத் தெளிவாகும்.
ஆரியசாஸ்திரங்களில் எட்டுவகையான மணங்கள் கூறியிருக்கின்றன தமக்கிஷ்டமான நாயகனையோ நாயகியையோ முழுமன மொத்து மணம் புரிதலே உத்தமமானது. பெற்றோர்கள் இதற்கிசைந்து நடத்தலே நலந்தரும். ஆனால் மணமகனையும் மண மகளையும் பெற்றவர்கள், தம் குழந்தைகளின் சுகத்தைக் கருதியே சம்மந்தம் செய்ய விருப்பங்கொள்ளுவராதலால் அவர்கள் கருத்தையும் கூடுமானவரையில் தழுவிச் செய்வதே உத்தம விவாகமாகும். விவாகச் சடங்கு முடிந்த தினத்தின் இரவில் சாந்தி முகூர்த்தம் செய்து விடவேண்டும். இதுவே சாஸ்திரத்தின் கட்டளையாதலால் மணமகள் பருவமடைந்தவளாயிருக்கவேண்டும், வீண் சடங்குகளும், செலவுகளும் விலக்கவேண்டும். தெருத்தெருவாய் ஊர்வலஞ்செய்தல், பெரியாண்டவனுக்குப்பூசை போடுதல், காட்டேரிக்கும், கிராமதேவதைக்கும் ஆடு வெட்டிப் பொங்கலிடுதல், தாலிகூறை வைத்துப் படைத்தல், முகூர்த்தக்கால் குழியில், முத்து பவனம், கெம்பு, பொன் வெள்ளி போடுதல், முகூர்த்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி மாவிலை ஈட்டுதல், கட்டுக்கழுத்திகள் கம்பத்தைத்தொட்டு நடுதல், பெண்ணுக்கும் பிள்ளைக்கும் இரவல் நகைகளை வாங்கி அணியச்செய்தல், தம்பதிகளுக்கு நலுங்கிடுதல், சோபனப்பாட்டு பாடுதல் மாலை அரசாணிக்காலில் இடுதல், சாலும் கரகமும் வைத்தல் மரஉரலில் குடவிளக்கு நூற்றெட்டு கிளை விளக்கு, பல விளக்கு, காமாட்சி விளக்கு வைத்தல், ஈசான்ய மூலையில் மஞ்சள் வாருவாராய்ப் பூசி அம்மி குழவிவைத்தல், அனாவசியமாக டமாரா மேளம், தஞ்சாவூர் மேளம், பேரிவாத்தியங்களால் கேட்போர் காது செவிடு படும்படிச் செய்தல், உபநயனம்செய்தல், பாத பூஜை செய்தல், மைத்துனன் பாதரட்சைகளைப் போடுதல், வெள்ளி மிஞ்சி தொடுத்தல், காசியாத்திரை பிறதேசம்போதல், கோவிலுக்குப்போய் சூரைத்தேங்காய உடைத்தல், அம்மியில் பெண்ணின் காலைத் தூக்கிவைத்தல், அருந்ததி காட்டல், அரசாணிசுற்றி வருதல் பெண்களுக்குப் பணம் போடுதல், கலியாணப் பெண் மாப்பிள்ளை தாடையில் அப்பளத்தாலடித்தல் அசங்கியமான கேலிப்பாட்டுகள் பாடுதல் முதலான அறியாமையால் செய்துவரும் வழக்கங்கள் அவசியமானவை அல்ல. அவைகளைக் கைக்கொண்டு வீணாகப் பணச்செலவு செய்தல் பொருந்தாது.இவைகளால் ஆகும் செலவை மீதப்படுத்திப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இல்லற வாழ்க்கைத் தொடக்கத்துக்கு மூலதனமாகக் கொடுத்தலே சிறப்பாகும் கடன்பட்டு இவ்வழக்கங்களைச் செய்வது பேதமையே யாகும்.
மரணம் :- ஆதிகால புத்தர்கள் அஹிம்சா தருமத்தை முழுதும் பின்பற்றி சீலமாய்நடந்து நீண்ட ஆயுள்வாழ்ந்து வயோதிகம் முற்றி பிரஞ்ஞையற்ற காலத்தில் அவர்களை சமாதிப்படுத்தும் பொருட்டு நிலவரைகளைக்கட்டி, அந்நிலவரையில் வீற்றிருக்கச்செய்து, மேல்பாகத்தை கற்களால் மூடிவைத்திருந்து சில நாட்கள் சென்றபின் கற்களை எடுப்பித்து சமாதியில் வைக்கப்பட்ட பெரியார் உயிர்நீத்தபின்னரும் சமாதியாகிய வீற்றிருக்கும் நிலைதவறாதிருப்பாராயின், அப்பரிசுத்த சரீரத்தைச் சுற்றி உப்பு கற்பூரம் முதலியவைகளால் நிரப்பி பந்துக்க ளெல்லோரும் சேர்ந்து விழாவாய்க் கொண்டாடி, ஏழைகளுக்கு எல்லா தானங்களும் அளித்து, இறந்தவரின் மக்களைக்கொண்டாடி, அவர்களுக்கு புதுவஸ்திரங்களால் அலங்காரம்செய்து தலையில் பாகைகட்டி மரியாதைசெய்வது வழக்கம். இவ்வழக்கத்தின் உண்மைத்தத்துவத்தை அறியாதே தமிழ்நாட்டார் அப்பயனற்ற கிரியையை அநுஷ்டித்துவருகின்றனர்.
-C. P. R. பாரதி.
**************************
இந்நூலின் ஆசிரியர் திரு.C.P.R. பாரதி அவர்களைப் பற்றி பொதுவெளியில் இதுவரைப் பெரிதாக பேசப்படவில்லை என்பது வருந்தத்தக்கதே… 
சனாதன லீக்ஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக