வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ரெயில்வே - அந்த சைக்கோவை விடாதீர்கள்.. அரைமணி நேர சித்ரவதை..ஓடும் ரயிலில் நடந்தது என்ன?

tamil.oneindia.com  -Yogeshwaran Moorthi : வேலூர்: வேலூரில் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணி பெண், அரை மணி நேரத்திற்கு மேலாக சைக்கோவுடன் போராடினேன் என்று கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயற்சித்த போதும் தன் கையை அடித்து உடைத்துவிட்டதாக அந்த கர்ப்பிணி கூறியுள்ளார்.
இதுபோன்ற சைக்கோக்களை வெளியில் விடக் கூடாது என்று கூறியுள்ள பெண், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


கோவை - திருப்பதி பயணிகள் விரைவு ரயில் வேலூர் அருகே வந்து கொண்டிருந்த போது, 4 மாத கர்ப்பிணி ஒருவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது கழிவறை அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர், கர்ப்பிணி பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் கர்ப்பிணி பெண் அருகில் இருந்தவர்களுக்கு குரல் கொடுத்த போது, கர்ப்பிணி என்றும் பாராமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, கீழே விழுந்த கர்ப்பிணி பெண்ணை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கேவி குப்பம் அருகில் உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாழு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரயிலில் என்ன நடந்தது என்பது தொடர்பாக கர்ப்பிணி பெண் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் திருப்பூசில் மாலை 6.50க்கு ரயிலில் ஏறினேன். ஜோலார்பேட்டை வரும் போது 10.45 மணியாகியது. அப்போது ரயில் பெட்டியில் இருந்த பெண்கள் இறங்கிசென்றனர். அந்த நேரத்தில் அந்த பையன் மகளிர் பெட்டிக்குள் ஏறிவிட்டான். அப்போது நான், இது லேடீஸ் கோச்.. நான் ஒரு பெண் தான் இருக்கிறேன்.

நீங்கள் இறங்கிவிடுங்கள் என்று கூறினேன். அதற்கு அந்த பையன், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார். பின்னர் நான் வேறு இடத்தில் அமர்ந்திருந்தேன். பின்னர் கழிவறை சென்ற அந்த பையன், ஆடைகளை அவிழ்த்துவிட்டு நேராக என்னை நோக்கி வந்தான். அப்போது நான் அவனிடம், கர்ப்பிணியாக உள்ளேன். நான் அந்த மாதிரி பெண் கிடையாது என்று கெஞ்சினேன்.

உனக்கும் அக்கா, தங்கை இருப்பார்கள்.. என்னை இப்படி செய்யாதே என்றேன். தொடர்ந்து, ரயில் செயினை இழுக்க முயற்சித்தேன். உடனே என் தலைமுடியை பிடித்து அடிக்க தொடங்கிவிட்டான்.. நானும் போராடி கழிவறை சென்று மூடிவிட்டு, செயினை இழுக்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் என்னை இழுத்து படிக்கட்டிற்கு அருகில் கொண்டு சென்றான்.

அப்போது ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்று கம்பியை இறுக்கமாக பிடித்திருந்தேன். இதனால் எனது ஒரு வலது கையை உடைத்துவிட்டான். பின்னர் என் காலினை எடுத்து கீழே விட்டுவிட்டான். ஒரு 10 நிமிடங்கள் வரை போராடினேன். ஆனால் கீழே தள்ளிவிட்டுவிட்டான். பின்னர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆம்புலன்ஸில் அழைத்து வந்து அனுமதித்துள்ளார்கள்.

அரை மணி நேரத்திற்கு மேலாக ரயிலில் போராடினேன். எனக்கு நடந்ததை போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவனுக்கு முடிந்த அளவிற்கு ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோல் வேறு பெண்ணிற்கு நடக்காது என்று என்ன நிச்சயம் இருக்கு.. இந்த சைக்கோவை வெளியில் விடாதீர்கள். குறைந்தது ஆயுள் தண்டனையாவது கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது. ரயிலில் மட்டுமல்ல.. நடந்து செல்லும் போது கூட பாதுகாப்பு இல்லை.. இதுபோன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணின் வாக்குமூலம் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக