சனி, 4 ஜனவரி, 2025

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்டு நிறைவு!

 minnambalam.com -christopher :  வேலூர் காட்பாடி அருகே காந்திநகரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்த வந்தனர்.
ஆனால் கதிர் ஆனந்த் துபாய் சென்றிருந்தால், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அதேவேளையில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள துரைமுருகன் ஆதரவாளரும், திமுக மாவட்ட நிர்வாகியுமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்கள், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.



தொடர்ந்து 6 மணி நேரமாக காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு, காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி மதியம் 3 மணியளவில் சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் சோதனையைத் தொடங்கியது.

எனினும் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றை வீட்டினுள் கொண்டு சென்றனர்.

சுமார் 11 மணி நீடித்த இந்த சோதனை நள்ளிரவு 1.20 மணியளவில் நிறைவடைந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அமலாத்துறையின் இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியான நிலையில், என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக