வெள்ளி, 10 ஜனவரி, 2025

AI தான் next best கிங்... பிடிஆர் போட்ட மாஸ்டர் பிளான் - அசந்து போன ஸ்டாலின்

 மின்னம்பலம் - Selvam :  AI தொழில்நுட்பம் தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் பேசப்படுகின்ற ‘Next Big Thing’ என்பதை உணர்ந்து,
 சரியான திசையை நோக்கி, இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்றுதொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐடி துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, “
தமிழ்நாடு எப்போதும் Advanace!
இந்த மாநாட்டின் சிறப்பம்சம் என்பது, இது தொழில்துறை சார்ந்த கல்வியாளர்கள், தொடக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்களை ஒரு கூரையின்கீழ் ஒருங்கிணைக்கவும், ஒன்றிணைக்கவும் துடிப்பான தளமாக செயல்பட்டு வருவதுதான், AI தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் பேசப்படுகின்ற ‘Next Big Thing’.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே பலமுறை சொல்லியிருக்கிறார். ”AI, Machine Learning” இதனால் எல்லாம் வேலைவாய்ப்புகள் குறையாது. மேலும், வேலைவாய்ப்புகள் பெருகத்தான் செய்யும்” என்று தெளிவாக பேசியிருக்கிறார்.

அந்த வகையில், சரியான திசையை நோக்கி, இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கும் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல, இது தொலைநோக்கு கொண்ட மாநாடு. தமிழ்நாட்டின் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு.

அனைத்துத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்று வழிகாட்டுகின்ற மாநாடு.

சென்னையில் டைடல் பூங்காவை உருவாக்கிய கலைஞர்
நம்முடைய தமிழ்நாடு தொழில்நுட்பம் என்பது புத்தாக்கம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் எப்போதும் முன்னோடி மாநிலம்தான். வணிகத்தையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட நாம் எப்போதும் ஒரு அடி Advance-ஆக இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில்தான், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, Block Chain, இணையக் கருவிகள் (IOT), மின் வாகன உற்பத்தி மற்றும் வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற முன்னெடுப்புகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், நாம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, G.C.C. எண்ணிக்கை அதிகரித்து வருவதை சொல்லுவேன். ஆனால், என்னதான் முன்னணியில் இருந்தாலும், ‘இதுவே போதும்’ என்று நான் நினைக்க மாட்டேன். இன்னும், கூடுதலான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்லவேண்டும் என்று தான் நினைப்பேன்.

அதை சரியாக புரிந்துகொண்டு நம்முடைய பி.டி.ஆர். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார். 1999-ஆம் ஆண்டு, கலைஞர் சென்னையில் டைடல் பூங்காவை
உருவாக்கினார். இன்றைக்கு நாம் அடுத்தகட்டத்திற்கு சென்று
கொண்டிருக்கிறோம்.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஓசூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி என்று இரண்டாம் கட்ட, மூன்றாம்கட்ட நகரங்களில் கூட எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்களும், சிறு தொழில்நுட்பப் பூங்காக்களும் நிறுவப்பட்டிருக்கிறது.

தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி!

இதற்கு காரணம் என்ன? “வளர்ச்சி தலைநகரத்தில் மட்டுமே குவியக் கூடாது. உண்மையான வளர்ச்சி என்றால் அது சமச்சீரானதாக, பரந்துபட்டதாக இருக்க வேண்டும்”.

இதனால்தான், சென்னை மட்டுமல்லாமல், மற்ற நகரங்களைச் சுற்றியிருக்கும்
இளைஞர்களுக்கும் அவர்கள் பகுதிகளிலேயே வேலைவாய்ப்புகளுக்கான மாபெரும் உந்துசக்தியை நாம் உருவாக்கி வழங்கிக் கொண்டு வருகிறோம்.

இந்த வரிசையில், AI-க்காக கோவையில் ‘Public Private Partnership’ முறையில் 2 மில்லியன் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’-யை நிறுவப் போகிறோம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் திமுக அரசு செயல்பட்டு
வருகிறது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம்.

இதற்கான தொழில்நுட்பக் கொள்கை ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். அதுவும் விரைவில் வெளியிடப்படும்.
ஐ.டி. துறை வளர மனித வளங்கள் மிக முக்கியம். அதற்காக தான்
என்னுடைய கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை
உருவாக்கினேன்.

வேறு மாநிலத்திலிருந்து, இங்கு இருக்கும் பலரும் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு Soft Skills, தொழில் சார்ந்த திறன்களை அளிப்பதில் அந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

மற்ற மாநில இளைஞர்களோடு ஒப்பிடும்போது நான் முதல்வனால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு பெரிய ‘Levarage’ கிடைத்திருக்கிறது. அதேபோல், ICT பயிற்சி நிறுவனம் மூலம், கடந்த ஓராண்டில் 10 ஆயிரத்து 435 ஆசிரியர்கள் மற்றும் 34 ஆயிரத்து 267 மாணவர்கள் தொழில் சார்ந்த திறன்களுக்கான பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

Cyber Security-க்கு முக்கியத்துவம்!

ஐ.டி.-யிலேயே எந்தெந்த துறைகளில் Develop ஆகின்ற Scope அதிகமாக
இருக்கிறது என்று கவனித்து, அந்தத் துறைகளில் நம்முடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, பல்வேறு தொழில்பிரிவுகளுடன் 78 கோடி ரூபாயில், 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திருக்கிறோம்.

இது ஒரு பக்கம் என்றால், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கவும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கொண்டு வருகிறோம். தமிழ்க் கணிப்பொறிக்கான டிஜிட்டல் வடிவங்களைத் தரப்படுத்தும் யுனிகோட் கன்சார்ட்டியத்தில் நிறுவன உறுப்பினர் நிலையில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் விளங்குகிறது.

Internet-இல் தமிழ் மொழி குறித்த பொருண்மைகளை மேம்படுத்த உதவவேண்டும் என்று பிழைதிருத்தி, கிராமர் அனலைசர், உரை திருத்தி
போன்ற நிறைய மென்பொருள்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியிருக்கிறது.

தமிழ்ப் பொருண்மைகள் அடிப்படையில், Al தொடர்பான முயற்சிகளுக்கு NLP கருவிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது.


இதெல்லாம் செய்தால் மட்டும் போதுமா? இல்லை. அதனால்தான், Cyber Security-க்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இதற்காக, 2024-ஆம் ஆண்டில் ‘Cyber Security Policy 2.0′-60621 வெளியிட்டோம்.

டேட்டாவும், தொழில்நுட்பமும்தான் காரணம்!

MSME-களுக்கான Cyber Security தொழில்நுட்ப உதவிப் பிரிவையும் ஏற்படுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும், மின்-ஆளுமையை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு இ-சேவைகளை வழங்கவும் தகவல் தொழில்நுட்பம் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது.

அரசின் அனைத்து சேவைகளும் Online-ல் வழங்கப்படவேண்டும். மக்களின் நேரமும், அலைச்சலும் மிச்சமாகவேண்டும். அந்த நோக்கத்தோடுதான் நம்முடைய திமுக அரசு
இ சேவை மையங்களின் அமைப்பு முறையை வலுப்படுத்தியிருக்கிறது.

2021-ஆம் ஆண்டில் 14,927-ஆக இருந்த இ-சேவை மையங்கள் 2024-ஆம் ஆண்டு முடிவில் 33,554 என்ற அளவுக்கு இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.


இன்றைக்கு நாம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண்,
தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் தொடங்கி, மாதாமாதம் கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துகிறோம். அதற்கும்
இந்த டேட்டாவும், தொழில்நுட்பமும்தான் காரணம்.

அப்படிதான்,
• 1 கோடியே 28 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 522 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. எது இல்லை என்றாலும் பரவாயில்லை, Internet அனைத்து இடங்களிலும் இருக்கவேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
• அதற்காக தான், சென்னையில் இருக்கும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பொது மக்கள் இணைய வசதியை எளிதாக பயன்படுத்த 1,204 இலவச Wi-Fi Points நிறுவியிருக்கிறோம்.
•தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க, ‘சிறப்பு உதவி மையம்’ ஒன்றை ELCOT நிறுவ இருக்கிறது.

இப்போது நான் பட்டியலிட்ட இந்த அனைத்து பணிகளையும் ஆர்வத்துடன், ஒரு பெரும் கனவோடு முறைப்படுத்திச் செயல்படுத்திக்கொண்டு வருகிறார் நம்முடைய தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்தப் பணிகள்
எல்லாம் தொய்வில்லாமல் தொடரவேண்டும் என்றுதான் இந்த மாநாட்டை உரிய காலத்தில் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.


இது DIGITAL யுகம். இனி, மக்களுடைய அனைத்து பயன்பாடுமே Digital வழியாகதான் இருக்கும். இந்தப் பயன்பாடு Simple-ஆக அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.

அதேநேரத்தில், முறைகேடுகள் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களும் இருக்கவேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவும் அதே வேகத்தில், டிஜிட்டல் குற்றங்களும் பரவி வருகிறது. அவை தடுக்கப்படவேண்டும். அதற்கேற்ப, தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படவேண்டும், வலுப்படுத்தப்படவேண்டும்.

ஐ.டி. மற்றும் புதுமைக்கான அடுத்த யுகத்தை நோக்கி, வளமான வாய்ப்புகளைக் கண்டறியவும், அறிவார்ந்த கருத்துகளைப் பரிமாறிக்கவும், கூட்டாண்மை நிறுவனங்களை உருவாக்கவும் இந்த மாநாட்டை இங்கு வந்திருக்கும் வல்லுநர்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒளிமயமான டிஜிட்டல் களத்தில் எதிர்காலத்தை நோக்கி நாட்டையும், உலகையும் வழி நடத்துவதற்கான நம்முடைய ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாக Umagine 2025 திகழட்டும்.

புதுமை மற்றும் மேன்மையின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம். எந்தப் புதுமை வந்தாலும், அதை முதலில் முயன்று பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு எப்போதும் இருந்திருக்கிறது. “முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்” இருப்பது நம்முடைய தமிழ்நாடு. அந்த வழியில் நம்முடைய அனைத்து செயல்பாடுகளும் இருக்கவேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக