திங்கள், 11 நவம்பர், 2024

மகாராஷ்டிரா தேர்தல் பெண்கள் உரிமைத்தொகை! திமுக பாணியில் காங்கிரஸ் பாஜக வாக்குறுதி

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என பாஜகவும், மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணியும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மாநிலங்கள் தோறும் இந்த வாக்குறுதி, தேர்தல் களத்தில் முன் நிற்கிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வரத் தொடங்கி உள்ளது.

கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
maharashtra assembly election 2024 magalir urimai thogai dmk 2024

அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டம் தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் கட்சி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 3,000 மாதா மாதம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல் ஹரியானாவில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 பெண்களுக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது.

பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாகவும் மாதம் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தில் 21 வயது நிறைவடைந்த குடும்பத் தலைவிகள், பயன்பெற்று வருகின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இந்த திட்டத்தால் பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் சற்று தன்னிறைவு பெற்று வருகின்றன. 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் மாதந்தோறும் ரூபாய் 1000 பெற்று வருகின்றனர். கடந்த 13 மாதங்களாக இந்த உரிமைத்தொகை, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி என்ற திட்டத்தை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

தெலுங்கானா மாநிலத்திலும் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2,500 பணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, அங்கு ஆட்சியைப் பிடித்தது. அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிரகலட்சுமி உத்தரவாதத் திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ 1000 ரூபாயை வழங்குவதாக 2023 ஆம் ஆண்டு தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால், அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் மகளிருக்கு ரூபாய் 1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த தொகையை ரூ. 2,100 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ ஒரு படி மேலே சென்று, ரூ.3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பெண்களின் வாக்குகளைக் கவர, இந்த திட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக