ஞாயிறு, 10 நவம்பர், 2024

நடிகை கஸ்தூரி தலைமறைவு.! தெலுங்கு மக்களுக்கு எதிரான அவதூறு பேச்சு! தேடும் தனிப்படை போலீஸார்

 tamil.oneindia.com -Vishnupriya R : சென்னை: நடிகை கஸ்தூரி எங்கே இருக்கிறார் என்பதை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக புகாரின் பேரில் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் வழங்கவிருந்த நிலையில் தனது போயஸ் தோட்ட வீட்டை பூட்டிக் கொண்டு கஸ்தூரி எங்கே போனார் என தெரியவில்லை.
அவருக்கு போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் என வருகிறது.
பிராமணர்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகி கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 3ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேஜர் முகுந்த் தியாகராஜன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் போது அவரது அடையாளத்தை அமரன் படத்தில் மறைத்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கஸ்தூரி பேசுகையில் திராவிடம் குறித்தும் திமுக குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்தும் அவர் கொச்சையாகவும் அவதூறாகவும் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் விளக்கம் அளித்தார். எனினும் அவர் மீதான விமர்சனங்கள் நின்றபாடில்லை. இதனால் அவர் தனது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது அவர் நான் தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசவில்லை. எனது பேச்சு திரிக்கப்பட்டுவிட்டது. தமிழும் தெலுங்கும் இரண்டு கண்கள் போல் நானும் என் குழந்தைகளும் பாவிக்கிறோம். எனது மாமியார் வீடும் தெலுங்கு பேசுபவர்கள்தான். தெலுங்கு பேசும் மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டனர். எனவே என் மீது அவதூறு பரப்பு முயற்சிக்க வேண்டாம் என விளக்கமளித்தார். மேலும் அவர் பேசிய வீடியோவை போட்டு அவர் அவதூறாகத்தான் பேசினார் என நிருபர்கள் சொன்ன போது கூட , அந்த வீடியோவை கேட்க மறுத்து, நான் தவறாக பேசவில்லை, நான் பேசியது எனக்கு தெரியாதா என கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச் செயலாளர் நந்தகோபால் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணைக்காக நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க நேற்று அவருடைய போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்றனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவாகியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீஸார் கஸ்தூரியை தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக