வியாழன், 28 நவம்பர், 2024

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

மாலை மலர் :  உலகம் முழுவதும் குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்கள் பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டங்களை இயற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த மசோதா குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது. இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக