செவ்வாய், 19 நவம்பர், 2024

அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்” : திண்டுக்கல் சீனிவாசன்!

 மின்னம்பலம் -christopher :  அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணியை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் மாவட்டந்தோறும் கள ஆய்வுக் குழு மூலம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருச்சி சோமரசம் பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டணியைக் கெடுத்துவிடாதீர்கள்!

அதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ”கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தங்க மணியையும், என்னையும் அழைத்து ’நீங்கள் பெரிதாக பேட்டி கொடுத்து கூட்டணியைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்று கூறினார். ’நாங்கள் ஏன் கெடுக்கப்போறோம்’ என்று கேட்டோம்.

அதற்கு அவர், “நீங்கள் எவனையாவது திட்டிவிட்டு வந்து விடுவீர்கள். அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். அதனால் ‘அண்ணே பார்த்துக்கங்க’ என்று அவர் கையெடுத்து கும்பிட்டார். உடனே ‘ஏங்க வம்பு.. இனி நாங்கள் நிருபர்களையே பார்ப்பதில்லை’ என்று கூறி வந்துவிட்டோம்.

இன்று கூட்டத்திற்கு வந்த போது, வாசலிலில் நிருபர்கள் மைக்கை நீட்டினார்கள். அவர்களுக்கு ’வணக்கம்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் பரபரப்பான செய்தி வெளியிடுவதற்காக எதையாவது கேட்பார்கள். அதற்கு பதில் சொன்னால் எடப்பாடி எங்களை நீக்கி விடுவார்.

இந்த கொடுமையில் தான் எடப்பாடி மாட்டியுள்ளார்!

அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி வேதனையில் இருக்கிறார். யார் இப்போது சும்மா வருகிறார்கள்? கூட்டணிக்கு  வருபவர்கள் எல்லாம் ’20 சீட் கொடுங்க, ரூ.50 கோடி தாங்க, ரூ.100 கோடி தாங்க’ என கேட்கின்றனர். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேசுகிறார்கள்.

’ஏன் தலைவரே கொஞ்சம் குறைச்சிக்கலாமே என்று கேட்டால், ‘இதை வைத்து தான் நாங்க பிசினஸ் செய்கிறோம்’ என்கிறார்கள். இந்த கொடுமையில் தான் எடப்பாடி மாட்டியுள்ளார்.

விரைவில் நல்ல செய்தி வரும். கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக