திங்கள், 16 செப்டம்பர், 2024

ராணிப்பேட்டையில் Jaguar Land Rover உற்பத்தி ஆலை : செப். 28ல் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!

 kalaignarseithigal.-Lenin :  ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை மற்றும் மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு வரும் செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.


தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்.27 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு 25 முன்னணி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,516 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமையவுள்ளது.

இதாற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே கடந்த மார்ச் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தோல் மற்றும் காலணி உற்பத்தியை சர்வதேச தரத்தில் உயர்த்தி, 20 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் நோக்கில், பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமையவுள்ளது.

இந்நிலையில் இவ்விரு ஆலைகளுக்கும் வருகிற செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த இரண்டு புதிய ஆலைகள் மூலம் மொத்தம் 25ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக