செவ்வாய், 17 செப்டம்பர், 2024

பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!

  nakkheeran.in :  சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கிருபாகரனுக்குத் தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது.


இது தொடர்பாகத் தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அந்த சிறுவர்கள் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக  புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தாக்குதல் நடத்திய 5 பேரில் பிரபல பின்னணி பாடகர் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோர் வீட்டில் இல்லை என மனோ தரப்பில் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. பின்பு அவர்கள் இரண்டு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோரை 10க்கும் மேற்பட்டோர் கட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்குவது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் 4 இருசக்கர வாகனத்தில் வந்த 10க்கும் மேற்பட்டோர் மனோவின் மகன்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு பாடகர் மனோ சார்பில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களை 10க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக