வியாழன், 26 செப்டம்பர், 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ! நிபந்தனைகள் என்னென்ன?

 vikatan.com =  Antony Ajay R, பிரேம் குமார் எஸ்.கே.: ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.
முன்னதாக, ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.



இந்தநிலையில் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக கடந்துவிட்ட செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார்.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது.

அமலாக்கத்துறையில் சார்பில் வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்குப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று (26.09.2024) காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு.

செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், விசாரணை கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற எந்த தடையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக