புதன், 7 ஆகஸ்ட், 2024

கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்!

ராதா மனோகர் : சுமார் ஒரு நூற்றாண்டு வரலாற்றை சுமந்து சென்ற கலைஞர் கருணாநிதி என்ற மாமனிதர் பற்றி ஆயிரம் கதைகள் கூறலாம்!
ஆனால் கலைஞரின் ஒட்டு மொத்த வரலாறும் ஏறக்குறைய ஒரே ஒரு மையப்புள்ளியை சுற்றியே சுழன்று அடித்ததாகதான் கருதுகிறேன்!
அவரின் வாழ்க்கை  வரலாற்று  தொடக்கப்புள்ளி என்னவோ திருகுவளையில் நிகழ்ந்த அவரின் பிறப்பில்தான் தொண்டங்கிற்று.
அது ஒரு குழந்தையின் பிறப்பு மட்டுமே.
ஆனால் கலைஞர் என்ற சுயமரியாதைக்காரரின் வரலாற்று திருப்பு முனை என்பது ஒரு பள்ளிக்கூட வாயிலில்தான்  தோன்றியது!

அந்த  திருக்குவளை பள்ளிக்கூடத்தில்,
 கருணாநி உன் மேலங்கியை கழற்றி விட்டு பள்ளிக்கூடத்திற்கு வா என்று ஒரு ஆசிரியரால் கூறப்பட்டது அல்லவா?
அதற்கு அந்த சிறுவன் ,
எனது மேலங்கியை கழற்ற மாட்டேன்,


என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்காது விட்டால் இதோ இந்த குளத்தில் விழுவேன் என்று  முன்னே உள்ள குளத்தை சுட்டி காட்டினான்  அவன்!
தன் சுயமரியாதைக்கு விட்ட சவாலை அவன் எதிர்கொண்டு வரப்போகும் பல இடி முழக்கங்களுக்கு முன் ஒரு மழலையின் முழக்கமாக கூறினான்!

கலைஞரின் வரலாற்று தொடக்க புள்ளி இதுதான் என்று தோன்றுகிறது.
ஏனெனில்  கலைஞரின் வாழ்வு முழுவதும் அவரது சுயமரியாதைக்கு சவால் வந்து கொண்டே இருந்தது.
அத்தனை  சவால்களிலும் ஒரு சமரசமற்ற சுயமரியாதைக்காரராகவே பணியாற்றி விட்டு போயிருக்கிறார் கலைஞர்!
கலைஞர் என்ற ஒரு தனிமனிதரின் சுயமரியாதை கோட்பாடு,
 தேர்தல் அரசியல் என்ற காட்டாற்று வெள்ளத்தில் எத்தனையோ சோதனைகளை சந்தித்தது.
ஆனாலும்  பயணம் என்னவோ சுயமரியாதை என்ற இலக்கை நோக்கித்தான் பயணித்தது.
ஆதிக்க சக்திகளின்  கொடுமைகளும் கேலிகளும் நயவஞ்சக கோட்பாடுகளும் திராவிட சுயமரியாதை கோட்பாட்டை  தகர்க்க முயன்ற சந்தர்பங்களுக்கு அளவே இல்லை.

ஆரியத்தின் அத்தனை சதிகளையும் தகர்த்தெறிந்து கொண்டு சுயமரியாதை கோட்பாடானது இன்று முழு துணைக்கண்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது .
ஏற்று கொள்ளப்படுகிறது .
அதை நோக்கி பயணப்படுகிறது!
இந்த பயணத்தின் திசை காட்டியாக நம் கண்ணுமுன்னே வாழ்ந்து காட்டிவிட்டு போயிருக்கிறார் நம் வரலாற்று நாயகன் கலைஞர்  
கலைஞர் ஒரு சுயமரியாதைக்காரர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக