சனி, 31 ஆகஸ்ட், 2024

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று இரவு தொடக்கம்! தீவுத்திடலில்

 tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 பந்தய நிகழ்வான 'சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது.


இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

போட்டிக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு ஆய்வு செய்தார். பல்வேறு தடைகளை தாண்டி இந்த போட்டி இன்று நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக