செவ்வாய், 23 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பார் கவுன்சில் தேர்தல்” : பிஎஸ்பி தலைவர் ஆனந்தன் ஷாக் தகவல்

 minnambalam.com  - Kavi  :  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பார் கவுன்சில் தேர்தலில் தோல்வியுற்றவர்களின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் ஆனந்தன் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வகித்த பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் வழக்கறிஞர் ஆனந்தன் இன்று (ஜூலை 22) நியமிக்கப்பட்டார்.
இதன் பின் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.ஆனந்தன், “காவல்துறை விசாரணை முந்தைய காலங்கள் போல் அல்லாமல் தாமதமாகத்தான் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையும் ஆரம்பக்கட்டத்திலேயே தான் இருக்கிறது.



ஆம்ஸ்ட்ராங்க் ஒரு தலித் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைத்து மக்களுக்குமான தலைவராக தான் இருந்துள்ளார். அப்படி ஒருவரின் வளர்ச்சி அனைத்துக் கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை. பொறாமையில் தான் இப்படி செய்திருக்கிறார்கள்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கிறது என போலீஸ் கூறுகிறது. ஆனால் ஆற்காடு சுரேஷ் எங்கள் கட்சியில் நீல நிற உடை அணிந்து எங்களுடன் இருந்தவர். அவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த விரோதமும் கிடையாது.  தவறுதலாக மீடியாக்களில் சொல்கிறார்கள்.

அவரை கொலை செய்ததாக சொல்லப்படும் ஜெயபால் என்பவர் 8,9 மாத காலமாக ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்ததும் இல்லை… தொலைபேசியில் பேசியதுமில்லை. இப்படி எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இந்த கொலை வழக்கில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ரத்தோர்,  ’ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று உளவு துறைக்கு பதில் மனு அனுப்பியிருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்தால் அதை யாராலும் செய்ய முடியாது.

உண்மையில் சொல்லப்போனால், ஆம்ஸ்ட்ராங் ஒரு பிரபல எம்.எல்.ஏவுடன் நண்பராக இருந்த காரணத்தால் அதிமுக ஆட்சியில் அண்ணன் மீது 6 பொய் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்குகளில் எந்தெந்த அதிகாரிகள் பொய் வழக்கு போட்டார்களோ, அந்தந்த அதிகாரிகள் மீதே வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் செய்திருக்கிறோம்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் ரவுடி லிஸ்ட்டில் உள்ளார் என்று தவறான தகவலை சொன்னதற்காக ஒரு பத்திரிகையில் எடிட்டர், பப்ளிஷர் உள்ளிட்ட 3 பேருக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறோம்.

பல அரசியல் கட்சியை சார்ந்தவர்கள்…ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்த சதியினால் ஏற்பட்ட கொலைக்கு ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடந்தது என தெரிய வேண்டும்.

பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எழும்பூர் கோர்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  கடந்த காலங்களில் ஆம்ஸ்ட்ராங் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர் உருவாக்கிய வழக்கறிஞர்கள், அண்ணன் சொல்லும் நபருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவார். அதனால் இதில் மற்ற தேர்தல்களில் தோல்வியுற்றவர்களின் சதியும் இருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது” என்று கூறினார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக