செவ்வாய், 2 ஜூலை, 2024

புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன

 hindutamil.in  :  புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலும், தமிழகத்தின் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றுக்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன.
 இதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியபோது, ‘‘இந்த சட்டங்களில் தண்டனைக்கு பதில் நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி விரைவாக விசாரணை நடத்தி விரைவாக நீதி வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

புதுடெல்லி ரயில் நிலையம் அருகே சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக தெருவோர கடைக்காரர் மீது புதிய சட்டத்தின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா) முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் நேற்று காலை செய்தி வெளியானது. இதை மறுத்த அமித் ஷா, ‘‘அது தவறான தகவல். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பைக் திருடு போனது தொடர்பாக, அதிகாலை 12.10 மணிக்கு பதிவானதுதான் முதல் வழக்கு’’ என்றார்.

தமிழகத்தை பொருத்தவரை, சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்தாப் அலி என்பவரிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து தப்பியது தொடர்பாக 304(2) என்ற பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை திருவல்லிக்கேணியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக சாரதி (21) என்ற இளைஞரை ஐஸ்அவுஸ் போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக