செவ்வாய், 2 ஜூலை, 2024

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!

 மின்னம்பலம் - Selvam :   புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் ஜூலை 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறைச் செயலாளரும்  மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ  தலைமையில், சட்டத்துறை தலைவர் விடுதலை முன்னிலையில் ஜூன் 29 அன்று திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் ஜூலை 1 முதல் அமல் செய்யப்பட்டுள்ள  மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக இருப்பதாக விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்து திமுக சட்டத்துறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ஜூலை 5-ஆம் தேதி காலை 10 மணி அளவில்  திமுக மாவட்டங்கள் ஒன்றிணைந்து மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், என்.ஆர்.இளங்கோ தலைமையில், விடுதலை முன்னிலையில் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து  வருகிற ஜூலை 7 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களின் பாதங்களை வழக்கறிஞர்கள் மட்டும்  இன்றி பொது மக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது என்றும், இந்த கருத்தரங்கத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல்  அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுத்துக் கொள்ள கூடிய   வகையில் அரங்க கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் பொது மக்களையும் பெருமளவில் கலந்து கொள்ள செய்ய வேண்டும்” என்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக