புதன், 10 ஜூலை, 2024

கட்டப்பஞ்சாயத்து கும்பல் கொலைகளும் சட்டம் ஒழுங்கு அறச்சீற்றங்களும்

May be an image of 1 person and text
LR Jagadheesan :  சட்டம் ஒழுங்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் கொலைகளும்
ஒரு மாநிலத்தின் மாநகரத்தின் சட்டம் ஒழுங்குக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரௌடிகும்பல்கள். அதிலும் அரசியல் லேபிளில் இயங்கும் கட்டப்பஞ்சாயத்து ரௌடிகும்பல்கள் கூடுதல் கொடூரம்.
அவர்களுக்கு எண்ணிக்கை பலம்கொண்ட ஜாதியும் பின்புலமாக இருந்தால் அவர் காவல்தெய்வமாகவும் கடையெழு வள்ளல்களின் நவீன அவதாரமாகவும் போற்றப்படுவார்.
அப்படிப்பட்ட அரசியல் லேபிளில் செயற்பட்ட ஜாதிச்செல்வாக்குமிக்க மோசமான கட்டப்பஞ்சாயத்து கும்பல் தலைவரின் படுகொலையை காட்டி,
 ஒரு மாநிலத்தின்/மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,
 என்று முக்கோ முக்கென முக்கிக்கொண்டிருக்கும் “மூத்த செய்தியாளர்கள்” தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்று.


என்னே உங்களின் “அற”ச்சீற்றம்!?!?!
சரி இந்த படுகொலையால் மாநில/மாநகர சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிற உங்களின் திடீர் குபீர் வாதம் சரியென்றால்,
 இதே சென்னையில் ஆற்காடு சுரேஷ் என்கிற இன்னொரு கட்டப்பஞ்சாயத்து ரௌடி கும்பல் தலைவர் சென்னை கடற்கரையில் வைத்து கடந்த ஆண்டு இதேபோல படுகொலை செய்யப்பட்டபோது ஏன் நீங்கள் யாரும் இப்படி பொங்கவில்லை?

இந்த வாதத்தை முன்வைக்கவில்லை?
அப்போது கெடாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் புதிதாக கெட்டுவிட்டதா? என்னப்பா உங்களின் நியாயம்? அரசியல் அளவுகோள்?
இந்த திமுக ஆட்சியின் மீதும் முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் மீதும் ஏராளமான புகார்கள் எனக்கும் உண்டு. அவை பொதுவெளியில் வைத்தும் இருக்கிறேன்.

ஆனால் ஒருமாநில/மாநகர சட்டம் ஒழுங்குக்கு முக்கிய சவாலாக இருக்கும் அரசியல் லேபிளில் இயங்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்களுக்குள் நடக்கும் கொலைகளை காட்டி ஒட்டுமொத்த மாநிலத்தின் மாநகர சட்டம் ஒழுங்கும் கெட்டுவிட்டதாக சொல்வது ஆனப்பெரிய நகைமுரண் மட்டுமல்ல அபத்தமும் கூட. பொதுமக்களுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முக்கிய சவால்களில் ஒன்றே இத்தகைய கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் தானே. அவர்கள் எந்த சட்டம் ஒழுங்கை பாதுகாத்தார்கள்?

ஒரே ஒரு விமர்சனத்தை இந்த ஆட்சியின் மீதும் மாநில காவல்துறையின் மீதும் வைக்கமுடியும் என்றால் அது இதுதான். தங்களின் அவ்வப்போதைய அரசியல் தேவைகளுக்காக இத்தகைய கட்டப்பஞ்சாயத்து கும்பல்களை தொடர/வளர அனுமதித்து, அடைக்கலம் கொடுத்து,
ஆதரித்து வளர்ப்பதை அரசியல் கட்சிகள் முற்றாக கைவிடவேண்டும்.
அதுவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மாறி மாறி ஆட்சி அதிகாரத்துக்கு வரும் திமுக/அதிமுக இரண்டுமே இதில் தங்களின் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்.

இவர்களிடமிருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும். இந்த படுகொலையை ஒட்டி ஆளும் திமுக எதிர்கொள்ளும் மிகப்பெரிய எதிர்ப்பும் வெறுப்பும் அதற்கொரு எச்சரிக்கை மணியாகவும் மறக்ககூடாத அரசியல் நிர்வாக பாடமாகவும் அமையவேண்டும்.

குறிப்பாக அதன் அடுத்த தலைமுறைக்கு.
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியே எமனாகும் என்பது கட்டப்பஞ்சாயத்து ரௌடிகும்பல்களுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் அரசியல்கட்சிகளுக்கும் பொருந்தும். காவல்துறைக்கும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக