சனி, 6 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை - 8 பேர் காவல் நிலையத்தில் சரண் -சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை

tamil.oneindia.com - Mani Singh S  :  சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கொலையாளிகளை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டினர்.
TN BSP Leader Armstrong murder case 10 person surrender at the Anna Nagar police station

அருகில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நண்பர்கள் இதை தடுக்க முயன்றனர். எனினும் அந்த கும்பல் சரமாரியாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த கும்பலினர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் படுகாயமடைந்த அவரது நண்பர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் ஆம்ஸ்ட்ராங்க் உயிரிழந்தார். பிரபல அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் ஆயுதங்களுடன் தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள்.

மேலும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் 8 பேர் சரண் அடைந்துள்ளனர். அண்ணா நகர் துணை ஆணையர் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்கள் 8 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் போலீசார் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக