செவ்வாய், 25 ஜூன், 2024

வேல்முருகன் : சபாநாயகர் அப்பாவு மீது பகிரங்க குற்றச்சாட்டு.. சட்டமன்றத்தை அலறவிட்ட

 tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  சென்னை: சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் தான் பேசுவதை தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் தங்களை பேசவிடுவதில்லை என்று அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகனை சபாநாயகர் அப்பாவு பேசவிடவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

என்னை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். பேச அனுமதி கொடுத்தார். ஆனால், ஒரு விஷயத்தை நான் முழுமையாக பேசுவதற்குள் தடுத்து விடுகிறார். உதாரணத்துக்கு, தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடப்பது குறித்து பேச ஆரம்பித்த போதே, அதை அவைக்குவிப்பில் இருந்து நீக்குவதாக சொல்லி விடுகிறார். பாசிசம் என்று சொன்னாலே பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார். அதேபோல், சிறைத்துறை கேண்டீனில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பேசினேன். அதையும் என்னை முழுமையாக சபாநாயகர் பேசவிடவில்லை.

அதையடுத்து, சிறைகளில் சூப்பிரடண்ட் அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்களை பற்றி பேசினேன். குறிப்பாக, காக்கிச்சட்டை போட்ட ரவுடியாக தனனை காட்டிக் கொள்வதற்காக ரோல் கால் (பெயரை அழைத்து கூப்பிட்டால் கைதிகள் உள்ளேன் ஐயா எனக் கூறும் நடைமுறை) செய்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதிகளை அவ்வாறு செய்யலாம். ஆனால், என்னை போல, அண்ணன் சீமானை போல மக்களுக்காக போராடி சிறை செல்பவர்களையும் ஏதோ விசாரணை கைதியை அழைப்பதை போல சிறை சூப்பிரடண்டு அழைக்கிறார். இது தவறான விஷயம் என்று பேசினேன். அதற்கு சபாநாயகர் அப்பாவு, எதற்காக சிறையிலேயே இருக்கிறீர்கள்.. வெளியே வாருங்கள் என நகைச்சுவையாக கூறுகிறார்.

நான் இப்படி சொல்லக்கூடாது.. ஆனாலும் சொல்கிறேன். அவை முன்னவர் ஏதேனும் மக்கள் பிரச்சினைக்காக சிறை செல்ல நேரிட்டால் அவரையும் ரோல் கால் முறையில் போலீஸார் அழைக்கலாமா? நான் அனைவருக்காகவும் தான் பேசுகிறேன். ஆனால் என்னை பேச விடாமல் சபாநாயகர் தடுக்கிறார் என்பதுதான் எனது குற்றச்சாட்டு. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக