செவ்வாய், 25 ஜூன், 2024

ஹஜ் - 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா

 வீரகேசரி : ஹஜ் புனித பயணத்தில் சோகம்.. 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா
“ரியாத்:சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு ‘ஹஜ்’ புனித பயணம் செல்கின்றனர்.
அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.



இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது, ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது.

83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.

வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக