வியாழன், 20 ஜூன், 2024

: திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம் - கைவிட்ட அண்ணாமலை.! காரணம் என்ன தெரியுமா?

 tamil.asianetnews.com - Ajmal Khan :  அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு மற்ற பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்த திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு போட்டியாக பாஜக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அதிமுகவுடன் நாங்கள் தான் பெரிய கட்சி, திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் போட்டி என கூறி வருகின்றனர். தினமும் திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்து அறிக்கை மற்றும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா தன் பங்குக்கு திமுகவை விமர்சித்து பதிவு செய்ய தொடங்கினார்.



ஒரு கட்டத்தில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த அவர், அண்ணாமலையை விமர்சிப்பவர்களை சமூகவலைதளம் மூலம் மோசமான வகையில் திட்டி கருத்துகளை பதிவிடுவார். அந்த சமயத்தில் தான் பாஜக நிர்வாகியாக இருந்த மருத்துவர் டெய்சி அருளுக்கும், திருச்சி சூர்யாவிற்கு மோதல் ஏற்பட்டது.  டெய்சி அருளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

மண்ணின் மைந்தனின் குரலை புறக்கணிக்கலாமா? தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் திருச்சி சூர்யா..

 பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியில் இருந்து 6 மாத காலம் திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இருந்த போதும் அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துகளையே திருச்சி சூர்யா சமூகவலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். நாடாளுமன்ற தேர்தல்  நெருக்கத்தில் திருச்சி சூர்யா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு அதே ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர்  பொறுப்பு வழங்கப்பட்டது. சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா, பாஜக முன்னாள் தலைவரும், இரண்டு மாநில ஆளுநராக இருந்த  தமிழிசையை கடுமையாக விமர்சித்திருந்து பதிவு செய்திருந்தார். மேலும் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே அண்ணாமலை மீண்டும் தலைவராக தேர்வு என்ற தகவலையும் சமூகவலைதளத்தில் பரப்பினார்.

தமிழிசை விமர்சனம்- கட்சியில் இருந்து நீக்கம்
இந்தநிலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது வெளியில் கட்சி நிர்வாகிகளை விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்படி திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர்  R.M.சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திரு. திருச்சி S.சூர்யா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக