செவ்வாய், 18 ஜூன், 2024

அரியலூர மூட நம்பிக்கையால் சொந்த பேரனை கொன்ற வீரமுத்து

 tamil.oneindia.com  -  Mani Singh S :   அரியலூர்: அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை டிரம் தண்ணீரில் முக்கி கொலை செய்த தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பேரக்குழந்தையை அவர் கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து - ரேவதி தம்பதி. இவர்களுக்கு அனுசியா, சுகன்யா, சங்கீதா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். இதில், அனுசியா உள்ளூரிலேயே திருமணம் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.


Ariyalur Crime Murder Police Superstition

சங்கீதாவை கடந்த 16 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பாலமுருகன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பாலமுருகன் - சங்கீதாவுக்கு கடந்த சித்திரை மாதம் ஒரு மகன் பிறந்துள்ளான்.

இதையடுத்து சங்கீதா தாய் வீடான அரியலூருக்கு வந்தார். அந்த குழந்தைக்கு சாத்விக் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலமுருகன் மகன் சாத்விக்கை பார்த்து விட்டு சென்றார். இந்த நிலையில் வழக்கம் போல், கடந்த 13 ஆம் தேதி இரவு, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு சங்கீதா வீட்டில் தூங்கினார்.

அவரது அருகே சங்கீதாவின் தாய் ரேவதியும் அக்காள் சுகன்யாவும் படுத்து இருந்தனர். மற்றொரு அறையில் அவரது தந்தை வீரமுத்து படுத்திருந்தார். இந்த நிலையில் காலையில் சங்கீதா எழுந்து பார்க்கையில் குழந்தை சாத்விக்கை காணவில்லை. இதனால் நாலாபுறமும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் குழந்தை தண்ணீர் டிரம் அருகே வேஷ்டி துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா கதறி அழுதார். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் குழந்தை இறந்தது எப்படி என்று தெரியவில்லை என கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சங்கீதாவுக்கு பிறந்த ஆண் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததாலும், இதனால் வீட்டில் நல்லதே நடக்காது என்றும் கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் தாத்தாவே பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை டிரம் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.

வீரமுத்துவுக்கு இந்த பேரக்குழந்தை பிறந்ததில் இருந்தே ஒரு பயம் இருந்து வந்துள்ளது. சித்திரை மாதத்தில் தலைப்பிள்ளை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்றும், குறிப்பாக தாத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், குடும்பத்தில் பன கஷ்டம் ஏற்படும் என்றும் ஜோதிடர் சொன்னதை கருதி ஒரு வித பயத்திலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை டிரம் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை வேஷ்டி துணியில் சுற்றி கீழை வைத்துவிட்டு, குடும்பத்தினர் குழந்தையை காணவில்லை என்று சொன்னபோது இவரும் அவர்களோடு சேர்ந்து தேடுவதுபோல் நாடகம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தான் வீரமுத்து உண்மையை சொல்லியிருக்கிறார். பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தாத்தாவே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வீரமுத்துவை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக