செவ்வாய், 18 ஜூன், 2024

பிரியங்கா காந்தி வயநாட்டில் (கேரளா) போட்டி! ராகுல் காந்தி ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார்


BBC தமிழ்  : மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த முடிவின் பின்னணி என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முந்தைய இரு தேர்தல்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு கிட்டத்தட்ட இருமடங்கு இடங்களை வென்றது. காங்கிரசுக்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்த ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் இருந்து மக்களவைக்கு தேர்வானார். இரு தொகுதிகளிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு தொகுதியை மட்டுமே மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதால் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாஜகவின் எழுச்சியால் காங்கிரஸ் நெருக்கடியில் இருந்த போது கைகொடுத்த வயநாடு தொகுதி எம்.பி,யாக நீடிப்பாரா? அல்லது அதிக எம்.பி.க்களைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரசை மீண்டும் வலுவான இயக்கமாக வளர்த்தெடுக்கும் முகமாக ரேபரேலியை தக்க வைப்பாரா? என்ற ஊகங்கள் அப்போது முதலே இருந்து வந்தன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரண்டு தொகுதிகளில் இருந்து மக்களவைக்கு தேர்வான நபர் இரண்டில் எந்த தொகுதி எம்.பி.யாக நீடிப்பது, எதனை ராஜினாமா செய்வது என்பதை 14 நாட்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி பார்த்தால், மக்களவைத் தேர்தல் முடிவு இம்மாதம் நான்காம் தேதி வெளியானது என்பதால் ராகுல் காந்தி தனது முடிவை அறிவிக்க நாளையே(18/06/2024) கடைசி நாளாக இருந்தது.

ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வதேராவும் இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தங்களது முடிவை அறிவித்தனர்.

ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "ராகுல் காந்தி இரண்டு இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டத்தின்படி, அவர் ஒரு இடத்தை காலி செய்ய வேண்டும், மேலும் அவர் ஒரு இடத்தில் இருந்து எம்பியாக இருக்க முடியும். இதற்கான முடிவை எடுக்க நாளை கடைசி நாள் என்பதால், ரேபரேலி தொகுதியில் இருந்து ராகுல் காந்தி எம்.பி.யாக இருப்பார் என்று இன்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், ஏனெனில் ரேபரேலி ஏற்கனவே அவரது குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையது. அங்குள்ள மக்களும், கட்சியும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வயநாடு மக்களும் ராகுல் காந்தி எம்பியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராகுல் காந்தி வயநாட்டு மக்களின் அன்பைப் பெற்றுள்ளார். ஆனால் ராகுல் காந்தி ஒரு இடத்தில் மட்டுமே எம்பியாக இருக்க சட்டம் அனுமதிக்கிறது." என்றார்.

மல்லிகார்ஜூன கார்கேவைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளுடனும் தனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பதாக கூறினார். வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்தார்.

"வயநாடு மற்றும் ரேபரேலியுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பிரியங்கா காந்தி வதேரா வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார். வயநாடு தொகுதிக்கு நானும் அவ்வப்போது சென்று வருவேன். ரேபரேலியுடன் எனக்கு பழைய பந்தம் உள்ளது. அந்த தொகுதியை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து மகிழ்கிறேன். ஆனால், இது ஒரு கடினமான முடிவாகவே இருந்தது." என்று ராகுல்காந்தி கூறினார்.


பிரியங்கா காந்தி கூறியது என்ன?
ராகுல் காந்தி இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ராகுல் காந்தி இல்லாததை வயநாட்டு மக்கள் உணர விடமாட்டேன். தொடர்ந்து வயநாடுக்கு வருவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நானும் கடுமையாக உழைப்பேன்" என்றார்.

ரேபரேலி தொகுதி பற்றி பிரியங்கா காந்தி கூறுகையில், "ரேபரேலிக்கும் எனக்கும் பழைய தொடர்பு உள்ளது. ரேபரேலி மற்றும் அமேதியில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்" என்றார்.

இதன் மூலம் பிரியங்கா காந்தி முதன் முறையாக நேரடியாக தேர்தல் அரசியலில் களமிறங்க உள்ளார். 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பிரியங்கா காந்தி காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் வியூகம் என்ன?

வயநாட்டை ராஜினாமா செய்துவிட்டு, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொள்ள ராகுல் காந்தி தீர்மானித்திருப்பது குறித்து அரசியல் அரங்கியல் பலவிதமாக ஊகங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசிய போது, "ராகுல் காந்தி டெல்லி அரசியலில் தீவிரமாக ஈடுபட தீர்மானித்துவிட்டார் என்பதற்கான முன்னோட்டமாகவே இதனைக் கருதுகிறேன். ஆண்டின் 365 நாட்களிலும் தேசிய அரசியலில் முனைப்புடன் இருக்க அவர் தலைநகரிலேயே தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே, அவர் ரேபரேலியை தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஒருவேளை வயநாட்டை தக்க வைக்க அவர் முடிவு செய்திருந்தால், இயற்கை பேரிடர் போன்ற நெருக்கடியான சமயங்களில் நேரில் செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் டெல்லி அரசியலில் முக்கியமான நகர்வுகள் நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில், ராகுல்காந்தியால் வயநாடு வரமுடியாமல் போனால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காகவே, அவர் ரேபரேலியை தக்க வைத்திருக்கிறார்" என்று கூறினார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தியை நிறுத்துவது என்ற காங்கிரசின் முடிவு குறித்துப் பேசிய அவர், "உண்மையில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியை விடவும் உறுதியான, மக்களைக் கவரும் தலைவர். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூட, மோதிக்கு பதிலடி கொடுப்பதில் ராகுல் காந்தியை விடவும் பிரியங்காவே சிறப்பாக செயல்பட்டார். மோதியின் குடும்ப அரசியல் குறித்த குற்றச்சாட்டிற்குப் பதில் கொடுத்த பிரியங்கா, என்னுடைய பாட்டி, தந்தை ஆகியோர் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்திருப்பதை முன்னிறுத்தி என்றாவது நாங்கள் வாக்கு கேட்டிருக்கிறோமா என்று கேட்டார். இது மக்களிடையே அதிகம் கவனிக்கப்பட்டது. அவரது வருகையால் தென் இந்தியாவில் காங்கிரஸ் மேலும் பலம் பெறும்" என்று கூறினார்.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் எதிர்காலம் குறித்துப் பேசிய குபேந்திரன், "ராகுல் காந்தி நிச்சயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்பார். அடுத்து வரும் நாட்களில் அவர் இன்னும் தீவிரமான அரசியல் தலைவராக மோதிக்கு எதிராக தன்னை முன்னிறுத்துவார். இந்த தேர்தலில் கூட ராகுல் காந்திக்கு மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. காங்கிரசில் உள்ள வேறு எந்த தலைவருக்கும் அந்த நம்பிக்கை இல்லை. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரசுக்கு நிச்சயம் பலம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக