வெள்ளி, 7 ஜூன், 2024

சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுப்பு.. சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு

 tamil.oneindia.co -  Velmurugan P  :  திருச்சி:பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் பதிவான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார்.
மேலும் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்..
திருச்சி வழக்கில் தான் சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் உள்பட எல்லா வழக்கில் இருந்து மீண்டால் தான் சவுக்கு சங்கர் வெளியே வரமுடியும
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இது ஒருபுறம் எனில் இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, கடத்மே 10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நீதிமன்ற உத்தரவு காரணமாக கோவை சிறையில் இருந்து சென்னை சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றப்பட்டார். சவுக்கு சங்கர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,

இந்நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கூடுதல் மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஜெயபிரதா முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினார்கள்

அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்யக்கூடாது.. கூடுதல் புகார் வந்தால், அந்த புகார்தாரரை முதல் வழக்கில் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினர். மேலும் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் வழங்கக்கூடாது என்று வாதிட்டனர்.

மேலும் சவுக்கு சங்கரை பழிவாங்கும் நோக்கில் அவரை அலைக்கழிக்கவே, ஒரே சம்பவத்துக்கு பல ஊர்களில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்வதாகவும் அவரது வக்கீல்கள்குற்றம்சாட்டினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார. மேலும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் வழங்க கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட திருச்சி மாஜிஸ்திரேட்டு, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் ஏதும் உங்களிடம் உள்ளதா? என்று போலீசாரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் இல்லை என்று கூறவே, சவுக்கு சங்கருக்கு (திருச்சியில் தொடரப்பட்ட வழககில் மட்டும்) நீதிமன்ற காவல் வழங்க மாஜிஸ்திரேட்டு மறுத்தார். அத்துடன், அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

டிவிசன் பெஞ்சுக்கு மாற்றம் : இதுஒருபுறம் எனில், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் பரிந்துரை செய்து நேற்று உத்தரவிட்டார்.

பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை கோடை விடுமுறை கால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை 3-வது நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பி.பி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று, இந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

இதை முதலில் ஏற்க மறுத்த நீதிபதி, ''இப்போது இந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தவறு என்று ஒருவேளை நீதிமன்றம் முடிவுக்கு வந்தால், ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அவருக்கு தமிழக அரசு வழங்க தயாராக உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், சவுக்கு சங்கர் எதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்? என்பதை அறிய இந்த நீதிமன்றம் விரும்புகிறது. அதனால், அரசு தரப்பில் பதில் அளிக்கவேண்டும்'' என்று கூறியதுடன் வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். பின்னர், இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'அரசு பதில் அளிக்காமல், விசாரணை அடிப்படையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். எனவே, தற்போது ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் (நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட) டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்" என்று கூறினார். இனி டிவிசன் பெஞ்ச் தான் சவுக்கு சங்கர் குண்டர் சட்ட வழக்கில் இறுதி முடிவெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக