திங்கள், 17 ஜூன், 2024

இவிஎம் மெஷின் பாதுகாப்பானதா? எலான் மஸ்க் - ராஜீவ் சந்திரசேகர் இடையே வார்த்தைப் போர்


மின்னம்பலம் - Selvam :  ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பம் மூலம்   இவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது” என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜீவ் சந்திரசேகர், “எலான் மஸ்க்கின் கருத்து பாதுகாப்பான டிஜிட்டல் மென்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்ற வகையில் உள்ளது. இது மிகவும் தவறானது.

அவரது கருத்துப்படி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இவிஎம் இயந்திரங்களில் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு இருக்கலாம். அங்கு இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள இவிஎம் மெஷின்கள் மிகவும் பாதுகாப்பானவை. இணையம், ப்ளூடூத், வை ஃபை வசதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவை” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “எதையும் ஹேக் செய்யலாம்” என்று தெரிவித்தார்.

ராஜிவ் சந்திரசேகர், “தொழில்நுட்ப ரீதியாக உங்களது வாதம் சரியானது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை. மேலும், வாக்குச் சீட்டு முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது” என்றார்.

எலான் மஸ்க்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் இவிஎம் மெஷின்கள் என்பது ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படவில்லை.

நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கவலையளிக்ககூடியதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழக்கும்போது ஜனநாயகம் மோசடிக்கு ஆளாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக