திங்கள், 17 ஜூன், 2024

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களால் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன நடந்தது? - BBC News தமிழ்

காபூலில் நடத்தப்பட்ட போராட்டம்

bbc.com -  Parwana Ibrahimkhail Nijrabi : ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலை, கல்வி மற்றும் பொது வெளியில் அவர்கள் நடமாடுவது தொடர்பான பல தடைகளை தாலிபன்கள் விதித்தனர். தொடக்கத்தில் சில பெண்கள் இந்தப் புதிய விதிகளை எதிர்த்து தெருக்களில் இறங்கிப் போராடினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் பிற முக்கிய நகரங்களில் 'உணவு, வேலை, சுதந்திரம்' என உரிமைகளைக் கோரியவர்கள், தாலிபன்களின் முழு பலத்தையும் வெகு விரைவில் உணர்ந்தனர்.


பிபிசி-யிடம் பேசிய போராட்டக்காரர்கள், தாங்கள் தாக்கப்பட்டதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 'கல்லெறிந்து கொல்லப்படுவீர்கள்' என மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்15-ஆம் தேதி, ஆப்கானிஸ்தான் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பெண்களின் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார்கள். அப்போது தாலிபன் அரசாங்கத்திற்கு சவால் விடுத்த பெண்களில், மூன்று பேரிடம் பிபிசி கலந்துரையாடியது.

காபூல் நோக்கிய அணிவகுப்பு
2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்15-ஆம் தேதி தாலிபன் போராளிகள் காபூலைக் கைப்பற்றியபோது, ​​சாகியாவின் வாழ்க்கை தடுமாறத் தொடங்கியது.

தாலிபன்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால் தாலிபன்கள் புதிய விதிகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து தனது வேலையை இழந்தார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு டிசம்பர் 2022-இல் சாகியா (புனைபெயர்) ஒரு போராட்டத்தில் சேர்ந்தார். ​​வேலை மற்றும் கல்விக்கான உரிமையை இழந்ததற்காக தனது கோபத்தை வெளிப்படுத்த அதுவே அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு.

எதிர்ப்பாளர்கள் காபூல் பல்கலைக்கழகத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அதன் 'வரலாற்று முக்கியத்துவம்' காரணமாக காபூல் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இலக்கை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆயுதமேந்திய தாலிபன் போலீஸ் சாகியாவின் குறுகிய கால கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அப்போது சாகியா உரத்த குரலில் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

"அவர்களில் ஒருவர் துப்பாக்கியை என் வாய்க்கு நேராகக் காட்டி, நான் வாயை மூடாவிட்டால் அங்கேயே என்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்," என்று அவர் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

சக போராட்டக்காரர்கள் ஒரு வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதை சாகியா கண்டார்.

"நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தாலிபன் போலீசார் என் கைகளை முறுக்கினார்கள். ஒருபக்கம் அவர்கள் என்னைத் தங்கள் வாகனத்தில் ஏற்ற முயன்றார்கள், மறுபக்கம் என்னை விடுவிக்க மற்ற சக எதிர்ப்பாளர்கள் இழுத்தார்கள்," என்கிறார் சாகியா.

இறுதியில், சாகியாவால் தப்பிக்க முடிந்தது. ஆனால் அன்று அவர் கண்ட காட்சிகள், எதிர்காலம் குறித்த பயத்தை ஏற்படுத்தியது.

"அந்த மோசமான வன்முறை, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கவில்லை, அது தலைநகர் காபூலின் தெருக்களில், மக்கள் அனைவரும் பார்க்க நடந்தது," என்று அவர் கூறுகிறார்.

கைது மற்றும் சித்திரவதை
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பின்னர், பல ஆப்கானிய எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதில், மரியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மற்றும் 23 வயது மாணவி பர்வானா இப்ராஹிம்கைல் நிஜ்ராபி ஆகிய இருவரும் இருந்தனர்.

கணவரை இழந்த மரியம், தன் பிள்ளைகளுக்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். பெண்கள் வேலைக்குச் செல்ல தடை போன்ற விதிகளை தாலிபன்கள் அறிமுகப்படுத்தியபோது, ​​தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று பயந்தார் மரியம்.

அவர் டிசம்பர் 2022-இல் நடந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டார். சக எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டதும், தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

"நான் வலுக்கட்டாயமாக டாக்ஸியிலிருந்து வெளியே இழுக்கப்பட்டேன், அவர்கள் என் பையை சோதனை செய்தனர். எனது செல்போனைக் கண்டுபிடித்தார்கள்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தாலிபன் அதிகாரிகளுக்குத் தனது செல்போனின் கடவுச்சொல்லை கொடுக்க மறுத்தபோது, ​​அவர்களில் ஒருவர் தன்னை பலமாக அறைந்ததாகவும், அப்போது தனது காதின் சவ்வு வெடித்துவிட்டது போல உணர்ந்ததாகவும் மரியம் கூறுகிறார்.

பின்னர் அவரது செல்போனில் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அந்த அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

"அவர்கள் கோபமடைந்து, என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். பின்னர் என் கைகளையும் கால்களையும் பிடித்து, என்னை அவர்களது வாகனத்தின் பின்புறத்தில் வீசினார்கள்," என மரியம் கூறுகிறார்.

தொடர்ந்து பேசினார் மரியம், "அவர்கள் மோசமான வன்முறையாளர்கள். என்னை ஒரு வேசி என்று திரும்பத் திரும்ப அழைத்தனர். என் கைகளில் விலங்கிட்டு, தலையில் ஒரு கருப்பு பையைக் கொண்டு மூடினார்கள். என்னால் மூச்சுவிட முடியவில்லை,” என்கிறார்.
காபூலில் நடத்தப்பட்ட போராட்டம்

‘ஆண்களுக்கு மத்தியில் பலவீனமாக உணர்ந்தேன்’

ஒரு மாதத்திற்குப் பிறகு, பர்வானாவும் தாலிபன்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்தார். சக மாணவர்களுடன் சேர்ந்து பல பேரணிகளை ஏற்பாடு செய்தார்.

ஆனால் அவர்களின் நடவடிக்கைக்கு விரைவான பதிலடி கொடுக்கப்பட்டது.

"என்னைக் கைது செய்ததில் இருந்தே, சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்கள்," என்கிறார் பர்வானா.

ஆயுதமேந்திய இரண்டு ஆண் காவலர்களுக்கு இடையே அவர் உட்கார வைக்கப்பட்டார். "நான் அங்கு உட்கார மறுத்ததால், அவர்கள் என்னை முன்னோக்கி நகர்த்தி, என் தலையில் போர்வையைப் போர்த்தினார்கள். துப்பாக்கியைக் காட்டி, இங்கிருந்து நகரக் கூடாது என்று சொன்னார்கள்," என்று விவரிக்கிறார் பர்வானா.

ஆயுதம் ஏந்திய பல ஆண்களுக்கு மத்தியில் மிகவும் பலவீனமாக, ஒரு நடைபிணம் போல உணர்ந்ததாகச் சொல்கிறார் பர்வானா.

"அவர்கள் என்னை பல முறை அறைந்ததால் என் முகத்தில் உணர்ச்சியே இல்லை. நான் மிகவும் பயந்திருந்தேன், என் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது," என்று கூறினார் அவர்.

மரியம், பர்வானா, மற்றும் சாகியா ஆகியோர் தாலிபன் எதிர்ப்பின் சாத்தியமான விளைவுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தனர்.

"தாலிபன்கள் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரியும். ஆனால், அவர்களது இழிவான நடவடிக்கைகளால் நான் மேலும் திகைத்துப் போனேன்," எனக் கூறுகிறார் பர்வானா.

சிறையில் அவருக்குக் கிடைத்த முதல் உணவு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"ஒரு கூர்மையான பொருள், என் வாயின் உட்பகுதியை கீறுவதை உணர்ந்தேன். நான் அதை வெளியே எடுத்து பார்த்தபோது, ​​​​அது ஒரு ஆணி. உடனடியாக நான் தூக்கி எறிந்தேன்," என்கிறார் பர்வானா.

அடுத்தடுத்த வேளை உணவுகளில், முடி மற்றும் கற்களைக் கண்டார்.

கல்லால் அடித்துக் கொல்வோம் என அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டியதாகவும், இதனால் இரவுகளில் தூங்காமல் அழுது கொண்டிருந்ததாகவும் கூறுகிறார் பர்வானா.

23 வயதான பர்வானா மீது, ஒழுக்கக்கேடு, விபச்சாரம், மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தை பரப்பியது தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டு, சுமார் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மரியம் பல நாட்கள் பாதுகாப்புப் பிரிவில் வைக்கப்பட்டார். அங்கு அவர் தலையை மறைக்கும் கருப்புப் பையுடன் தான் விசாரிக்கப்பட்டார்.

"பலரது குரலை நான் கேட்க முடிந்தது. ஒருவர் என்னை உதைத்து, போராட்டத்தை ஏற்பாடு செய்ய எனக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டார். மற்றவர் என்னை அடித்து, 'நீ யாருக்காக வேலை செய்கிறாய்?, சொல்' எனக் கேட்டார்," என நடந்ததை நினைவு கூர்ந்தார் மரியம்.

விசாரணையாளர்களிடம், தான் கணவனை இழந்த பெண் என்பதால், தன் குழந்தைகளுக்கு உணவளிக்க வேலை தேவை என்று கெஞ்சியதாகவும், ஆனால் அவருடைய கோரிக்கைகளால் மேலும் அதிக வன்முறையை சந்தித்ததாகவும் கூறுகிறார் மரியம்.


ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் விடுதலை
மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் தலையீட்டைத் தொடர்ந்து, பர்வானா மற்றும் மரியம் இருவரும் தனித்தனியாக விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இப்போது ஆப்கானிஸ்தானில் வசிக்கவில்லை.

இனி, தாலிபன்களுக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் என்று உறுதியளித்து, தங்கள் 'குற்றத்தை' ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாக இருவரும் கூறுகிறார்கள்.

அவர்களது ஆண் உறவினர்களும், பெண்களை இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

தாலிபன் என்ன சொல்கிறது?
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாலிபன் அரசாங்கத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்திடம் பிபிசி கேட்டது, அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஆனால் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டதை மறுத்தார்.

"கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் அரசுக்கு எதிராகவும், பொது பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சித்திரவதை செய்யப்படவில்லை. இஸ்லாமிய எமிரேட்டின் எந்த சிறைச்சாலையிலும் பெண்களை அடிப்பது இல்லை. அவர்களின் உணவும் எங்கள் மருத்துவ குழுக்களால் அங்கீகரிக்கப்பட்ட பிறகே அளிக்கப்பட்டது," என்கிறார் முஜாஹித்.

அடிப்படை வசதிகள் இல்லா நிலை
விடுதலை செய்யப்பட்ட சில பெண்களிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேர்காணல்கள் நடத்தியது. அவற்றுடன் ஒப்பிடும்போது, பிபிசி-க்கு கிடைத்த தகவல்கள் உறுதியாகின.

"தாலிபன்கள் எல்லா வகையான சித்திரவதைகளையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்த போராட்டங்களுக்காக அந்தப் பெண்களின் குடும்பங்களையும் கொடுமைப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை, மிகவும் பயங்கரமான சிறைச்சாலைகளில் அடைக்கிறார்கள்," என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உறுப்பினர் ஃபெரிஷ்டா அப்பாசி கூறினார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜமான் சோல்டானி, விடுதலை செய்யப்பட்டப் பல போராட்டக்காரர்களிடம் பேசியுள்ளார். பெண்கள் அடைக்கப்பட்ட சிறைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்கிறார் சோல்டானி.

"மோசமான குளிர்காலத்தில் ஹீட்டர் வசதிகள் இல்லை. கைதிகளுக்கு நல்ல, அல்லது போதுமான உணவு வழங்கப்படுவதில்லை. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை," என்று சோல்டானி கூறினார்.

சாதாரண வாழ்க்கைக்கான ஏக்கம்
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய சமயத்தில், பெண்கள் தொடர்ந்து வேலை செய்யலாம் மற்றும் பள்ளிக்குச் செல்லலாம் என்று தாலிபன் அமைப்பு கூறியது. ஆனால், ஆப்கானிய கலாச்சாரம் மற்றும் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையையும் அது விடுத்தது.

ஆறாம் ஆண்டுக்கு மேல் பெண்கள் பள்ளிப் படிப்பிற்கான தடை தற்காலிகமானது தான் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் அவர்கள் உறுதியாக இல்லை.

சாகியா, ஆப்கானிஸ்தானில் இளம் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக ஒரு வீட்டுக் கல்வி மையத்தைத் தொடங்கினார். ஆனால் அதுவும் தோல்வியடைந்தது.

"ஒரு இடத்தில் இளம் பெண்கள் குழுவாக ஒன்று கூடுவது அவர்களை அச்சுறுத்துகிறது," என்று அவர் கூறுகிறார்.
"தாலிபன்கள் அவர்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். நான் எனது சொந்த வீட்டில் கைதியாக இருக்கிறேன்," என்று கூறும் சாகியாவின் குரலில் சோகம் தெரிகிறது.

அவர் இப்போதும் தனது சக ஆர்வலர்களைச் சந்திக்கிறார், ஆனால் அவர்கள் எந்த போராட்டத்தையும் திட்டமிடவில்லை. புனைபெயரில் சமூக ஊடகங்களில் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானைப் பற்றிய அவருடைய கனவுகள் குறித்து கேட்டால், கண்ணீரே பதிலாக வருகிறது.
"என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இனி ஆப்கன் சமூகத்தில் நாங்கள் இல்லை. இங்கு பெண்கள் பொது வாழ்வில் இருந்து முற்றிலும் விலக்கப்படுகிறார்கள். நாங்கள் போராடியதெல்லாம் எங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத் தான், அதைக் கேட்டது குற்றமா?" என கேள்வி எழுப்புகிறார் சாகியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக