செவ்வாய், 7 மே, 2024

கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

 மாலை மலர்  :  சவுக்கு சங்கர் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்



எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக