வெள்ளி, 10 மே, 2024

அம்பானி, அதானி பற்றி பேச்சு.. மறுநாளே பிரச்சாரத்திற்கு போகாத மோடி.. என்ன நடந்தது? இதுதான் காரணம்

tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: அம்பானி, அதானி பற்றி முதல்முறையாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசினார்.
இந்த பிரச்சாரத்திற்கு மறுநாளே.. அதாவது நேற்று முதல்முறையாக இந்த தேர்தல் காலத்தில் மோடி பிரச்சாரம் எதையும் செய்யாமல் தவிர்த்து உள்ளார்.
நேற்று முதல் நாள் தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது,
​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடிதனது உரையில் கேள்வி எழுப்பினார்.
PM Modi did not campaign the whole day after talking about Ambani and Adani in his speech


மோடி பேச்சு; பிரதமர் மோடி தனது பேச்சில், கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸின் இளவரசர், காலையில் எழுந்தவுடன் அம்பானி, அதானி என்று கோஷமிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரஃபேல் விவகாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர் அம்பானி அதானி என்று கோஷமிட்டார். அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி-அதானியை பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்

இந்த தேர்தலில் இளவரசர்ராகுல் காந்தி அம்பானி-அதானியிடம் இருந்து எவ்வளவு வாங்கினார் என்று தெலுங்கானா நிலத்தில் இருந்து கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? நோட்டுகள் நிரப்பப்பட்ட டெம்போ காங்கிரசுக்கு வந்துவிட்டதா? அம்பானி-அதானியை பற்றி பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்கள் என்றால் என்ன ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.

உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் டீலிங் என்ன?. ஐந்து வருடங்களாக அம்பானி-அதானியை துஷ்பிரயோகம் செய்து ஒரே இரவில் நிறுத்திவிட்டீர்கள். அப்படி என்றால் உங்களுக்கும் அம்பானி - அதானிக்கும் இடையில் ஏதோ இருக்கிறது. இதற்கு நீங்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

காங்கிரஸையும் தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சியையும் இணைக்கும் ஒரே 'பேஸ்ட்' ஊழல். சில மதங்களை ஆதரிக்கும் அரசியல் தான் அவர்களின் செயல்திட்டம். காங்கிரஸும் பிஆர்எஸ்ஸும் 'ஜீரோ கவர்னன்ஸ் மாடலை' பின்பற்றுகின்றன. எனவே, இந்த கட்சிகளின் ஊழல் பிடியில் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, தலித்துகளுக்கான இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து முஸ்லிம் சமூகத்துக்கும் வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இந்துக்களின் நலனை உறுதி செய்வது அவர்களின் திட்டமோ அல்லது யோசனையோ அல்ல. காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்க விரும்புகிறது. இந்த ஊழல் கட்சி இந்துக்களை பற்றி கவலையே படுவது இல்லை, என்று தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ராகுல் காந்தி பதிலடி: இதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பதிலில், "மோடி ஜி வணக்கம்.. நீங்கள் பயந்துவிட்டீர்களா என்ன.. பொதுவாக நீங்கள் மக்களுக்குத் தெரியாமல் தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். ஆனால், இந்த முறை முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லாரியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது பாருங்கள்.. இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா?, என்று கூறியுள்ளார்.

பிரச்சாரம் செல்லவில்லை: அம்பானி, அதானி பற்றி முதல்முறையாக இப்படி பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசினார். இந்த பிரச்சாரத்திற்கு மறுநாளே.. அதாவது நேற்று முதல்முறையாக இந்த தேர்தல் காலத்தில் மோடி பிரச்சாரம் எதையும் செய்யாமல் தவிர்த்து உள்ளார்.

நேற்று மோடி முதல்முறையாக எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. நேற்று இரவு செய்தி சேனல்களுக்கு மோடி தனிப்பட்ட பேட்டி வழங்கினார். இதற்கான வீடியோ ஷூட்டிங் நடந்தது. அதனால் அவர் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் இதற்கு முன்பே ஷூட்டிங் இருந்த நாட்களில் கூட மோடி பிரச்சாரம் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து: