வெள்ளி, 31 மே, 2024

ஜெயமோகனின் ‘எச்சிலில் உருளும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

 Annamalai Arulmozhi  :   எது நீதி ??
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த எச்சிலையில் உருளும் சடங்கு பற்றிய தீர்ப்பைக் குறித்து,
ஜூனியர் விகடன் இதழில் நீதிபதி K.சந்துரு அவர்கள் எழுதிய கட்டுரை...
*எச்சில் இலை உருளலுக்கு நீதியின் உருட்டு!*
‘பக்தர்கள் சாப்பிட்ட இலைகள்மீது உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது அடிப்படை உரிமை’ என்று நீதிபதி சுவாமிநாதன் ஓர் அதிர்ச்சி தரும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட சடங்கு, அரசியலமைப்பில் மதம் சார்ந்த உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.
*குக்கே சடங்குக்கு நீதிமன்றத் தடை!*
கர்நாடக மாநிலம், மங்களுரூக்கு அருகில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது,
இதர சாதியினர் உடைகளைக் களைந்துவிட்டு உருளும் சடங்கு நடந்துவந்தது. அப்படி உருண்டால் பாவங்கள், பிரச்னைகள் தீரும் என்றார்கள்.


இதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உட்பட பலரும் அறிக்கை விடுத்தனர். வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் அந்தச் சடங்குக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது (2014).  “இப்படிப் பட்ட சடங்குகள் பொது ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது.  இப்படி எச்சில் இலையில் உருண்டால் தங்களுக்கிருக்கும் வியாதிகள் நீங்கிவிடும் என்று மக்களை நம்ப வைத்திருப்பது மூடநம்பிக்கைகளுக்கு வழிகோலும்” என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. தடைவிதிக்கக் கூடாது என்று வாதிட்ட வழக்கறிஞரோ, ‘இந்தச் சடங்குகள் 500 வருடங்களாக நடைபெற்றுவருகின்றன’ என்றார். உடனே அமர்வு நீதிபதிகளில் ஒருவரான மதன் லோகுர், ‘தீண்டாமைகூடத்தான் 500 வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதை அரசியலமைப்புச் சட்டம் தடை செய்யவில்லையா?’ என்று எதிர்க் கேள்வி எழுப்பி இந்தச் சடங்குக்குத் தடைவிதித்தார்.
இந்தச் சடங்கை எதிர்த்து ‘பெரியார் முழக்க’த்தில் கட்டுரை எழுதிய விடுதலை ராஜேந்திரன், ‘தமிழ்நாட்டைப்போல இந்த அவலங்களைக் கண்டித்து மக்களைச் சிந்திக்க வைக்கும் பெரியார் இயக்கங்கள் கர்நாடகத்தில் இல்லை என்பதனால் ஒடுக்கப்பட்ட மக்களும் விட்டில்பூச்சிகளாகச் சதியில் விழுந்து கிடக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார் (2011).
*தமிழ்நாட்டிலும் அதே சடங்கு!*
ஆனால், விரைவிலேயே அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று தமிழகத்திலும் பரப்பப்படும் என்று அன்று யாரும் நினைக்கவில்லை. கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்திலுள்ள சதாசிவ பிரம்மேந்திராள் என்பவரின் ஜீவசமாதியில், அன்னதானம் உண்ட பக்தர்கள் விட்டுச் சென்ற இலையின் மீது சிலர் உருண்டு புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்யத் தொடங்கினர். உணவு தயாரிப்பதும், உண்ட பிறகு உருண்டு புரண்ட இலைகளைக் குப்பைத்தொட்டியில் போடுவதும் சில பிராமணர்கள் என்று கூறப்படுகிறது.
2015-ம் வருடம் இந்தச் சடங்கை நிறுத்த வேண்டும் என்று தலித் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்தச் சமயம் கரூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக இந்தச் சடங்கில் தீண்டாமை எதுவும் இல்லை என்றும், எந்தச் சாதியைச் சேர்ந்தவராயிருப்பினும் வேறுபாடின்றி ‘உருளை சேவை’யில் ஈடுபடலாம் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதியான மணிக்குமார் உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி அதற்குத் தடைவிதித்தார்.

இதனால் எச்சில் இலைமீது உருளும் சடங்கு முடிவுக்கு வந்துவிட்டது என்று யாரும் நம்ப வேண்டாம். மீண்டும் இந்த வருடம் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதி தினத்தன்று (மே, 18) அன்னதானத்தின்போது விட்டுச் செல்லப்படும் எச்சில் இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வதாக விரதம் பூண்டிருப்பதாகவும், அதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாதவாறு தனக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் நவீன்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் கதவைத் தட்டினார்.
*ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு!*
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், வாங்கல் காவல் நிலைய ஆய்வாளரையும் தன்னிச்சையாக வழக்கில் இணைக்கும்படி உத்தரவிட்டார். ஜீவசமாதி தினம் 18.5.2024 என்றிருக்கும்போது தனது 39 பக்கத் தீர்ப்பை அதற்கு முந்தைய நாளே (17.5.2024) வெளியிட்டார்.

அந்த உத்தரவில் நவீன்குமாருக்குத் தன்னுடைய விருப்பப்படி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு யாரும் தடை செய்யக் கூடாது என்றும், 150 ஆண்டுகளாக இந்தச் சடங்கு நடைபெற்றுவருவதாகவும், அது சமயம் சார்ந்த உரிமை என்றும், தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, அலகு குத்துவதுபோல இதுவும் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் தீர்ப்பு கூறிய அவர், தனக்கு முன்னால் இதே விஷயத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு தவறானது என்றும், அது தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும் அந்த உத்தரவை, தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அறிவித்தார்.

*ஒரு மகாபாரதக் கதை!*
இது பற்றி மகாபாரதக் கிளைக் கதை ஒன்று உண்டு. தருமன் இரவலருக்கு அளித்த பெரும் விருந்தின் முடிவில் எச்சில் இலைகளில் ஒரு கீரி வந்து உருண்டதாம். உடலின் பாதிப் பகுதி தங்கமாக இருந்த அந்தக் கீரியைப் பார்த்து வியந்த தருமன், அதனிடம் ஏனென்று விசாரித்தான். `பல நாள் பசியாக இருந்த ஒரு பிச்சைக்காரன், தனக்குக் கிடைத்த பிச்சையில் இன்னொரு பிச்சைக்காரனுக்கு உணவளித்தான். அந்த எச்சில் இலையில் உருண்டதால் என் உடலின் ஒரு பாதி தங்கமானது. ஆனால், நீ அளித்த விருந்தின் எச்சில் இலையில் உருண்டபோது உடல் தங்கமாகவில்லை’ என்றதாம். அதாவது, தருமனின் கொடையைவிட அந்தப் பிச்சைக்காரனின் கொடை பெரிது என்று கூறுவதாக அந்தக் கதை அமைகிறது.

‘எச்சிலில் புரள்வது என்னும் சடங்கு’ என்ற தனது கட்டுரையில் இந்தக் கதையைக் குறிப்பிட்ட எழுத்தாளர் ஜெயமோகன், கூடவே இந்தக் கருத்தையும் சொல்லியிருக்கிறார். “இந்தக் கதை இந்தச் சடங்கு எத்தனை தொன்மையானது என்பதைக் காட்டுகிறது. கொடுப்பவன் தன் அகங்காரத்தை வெல்ல, எளிமையிலும் எளிமையாகத் தன்னை ஆக்கிக்கொள்ள இந்தச் சடங்கு முன்வைக்கப்பட்டு, அதன் பொருட்டே நீடித்திருக்கிறது என்று தோன்றுகிறது” என்கிறார் ஜெயமோகன்.
நீதிபதி சுவாமிநாதன் இதே கதையைத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, ஜெயமோகனின் கருத்து என்று கூறாமல் தன்னுடைய கருத்தாக மகாபாரத காலத்திலிருந்தே இப்படிப்பட்ட சடங்கு இருப்பதாக நியாயம் கற்பித்திருக்கிறார்.

ஐயப்பனை வணங்குவதற்கு சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களும் அங்கப்பிரதட்சணம் செய்வதையும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். ஆனால், சபரிமலைக்குப் பெண்கள் வழிபடச் செல்லலாமா என்ற வழக்கின் மையத் தீர்ப்பில், பெரும்பான்மை தீர்ப்பை வழங்கிய தற்போதைய தலைமை நீதிபதியான தனஞ்செய் சந்திரசூட்டின் கருத்தை, என்ன காரணத்தினாலோ தவிர்த்துவிட்டார்.
“தனிப்பட்டவர்களின் உரிமையியல் அந்தஸ்தில் சடங்கு, பழக்க வழக்கம், தனிநபர் சட்டம் ஆகியவை முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. ஆனால், அதையொட்டி இருக்கும் நடவடிக்கைகள் தனி உரிமையியல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அவற்றுக்கு சில சமய குணங்கள் இருந்தாலும் அவை அரசியல் சட்டத்தின் பாதுகாப்பைப் பெற முடியாது. அரசியல் சட்டத்திலிருந்து அந்தச் சடங்குகளைப் பாதுகாப்பதோ (அ) அவற்றை அரசியல் சட்டத்தின்படி ஆராய முற்படுவதோ அரசியல் சட்டத்தின் முதன்மையைத் தடுப்பதாகும்” என்பதே அந்தக் கருத்து.

இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால்,  “அரசியல் சட்டத்திலிருந்து விலக்கப்பட்ட சில நெறிகள் (அ) நடைமுறைகள் தீர்வுகளாக இருக்க முடியாது. தீண்டாமையை எப்படி நாம் நியாயப்படுத்த முடியாதோ அதேபோலத்தான் மதத்தின் அத்தியாவசியமான நடைமுறை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சமூகத்தில் ஒரு தனிநபர் அரசியல் சட்டத்தின் ஆதாரப் பிரிவு என்றும், அதனால் அவர்களது நெறி, நடைமுறை (அ) கட்டளைகள் அவை யாவையும் அரசியல் சட்டத்தின் தனிநபர் கௌரவத்தைக் குலைப்பதாக இருப்பின், அவையும் அரசியல் சட்டத்தின் கண்காணிப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”
இந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பை என்ன காரணத்தினாலோ நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொள்ளாததோடு தனது தீர்ப்பிலும் குறிப்பிடவில்லை. இவற்றையெல்லாம் விட ஒரு கேள்வி அவரிடம் கேட்க வேண்டும்.  கோவிட் 19-ன் நோய்த்தொற்றுப் பரவலின்போது பல கட்டுப்பாடுகளை அரசுகள் விதித்தன. கூட்டம் சேருவதைத் தடுப்பதற்காக, கோயில்கள் கூட மூடப்பட்டன. ஆகம விதிப்படி கோயில்களில் அனுஷ்டானங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதித்தாலும், பக்தர்கள் கோயில்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.  அந்தச் சமயத்தில் எந்தத் தனிநபராவது, ‘நோய் தொற்றினாலும் பரவாயில்லை. என்னுடைய நம்பிக்கைதான் முக்கியம்’ என்று கோயிலுக்குச் செல்ல அனுமதி கேட்டால், எந்த நீதிமன்றமாவது அனுமதித்திருக்குமா?

கணவன் இறந்தவுடன் அவனது சிதையில் உடன்கட்டை ஏறுமாறு மனைவியையும் சேர்த்துக் கொன்ற கொடுமைக்கு எதிராக 1829-ம் வருடம் வில்லியம் பென்டிங்க் என்ற ஆங்கில கவர்னர் ஜெனரல் கொண்டுவந்த சட்டத்தால் உடன்கட்டை ஏறும் சதி ஓரளவுக்கு நிறுத்தப்பட்டது. ஆனாலும், அந்த உடன்கட்டை ஏறும் நடவடிக்கைகள் சில இடங்களில் தொடர்ந்ததால் அதைத் தடுக்கவும், அப்படி எரிக்கப்பட்ட பெண்களை சதிமாதாவாக (தீப்பாய்ந்த அம்மன்) வழிபடுவதைத் தடுப்பதற்கு சதி தடுப்புச் சட்டம் 1987-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் நம்பிக்கைகள் அனைத்தும் சடங்குகளாக மாறிவிட முடியாது. இன்றும் பல மாநிலங்களில் மூடநம்பிக்கை, மாந்திரீகம், பில்லி, சூனியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் அதற்காக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் 2013-ம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கொலைகாரர்களுக்கு, 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரத்தில்தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, எல்லா நம்பிக்கைகளுக்கும் மதம் சார்ந்த அடிப்படை உரிமையை வழங்க முடியாது.
மத உரிமையை, அடிப்படை உரிமையாக ஆக்கிய அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு அதை பொது ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டதாகக் கூறியிருக்கிறது. குறிப்பிட்ட சடங்கு (அ) நடைமுறை சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று சொன்னால், அதற்கு அரசு தடைவிதிப்பதோடு, அந்த உத்தரவுகளை நீதிமன்றம் செயல்படுத்த வேண்டும். `சுத்தம் சோறு போடும்’ என்று சிறு பிள்ளைகளுக்கு பாலபாடம் நடத்தும் நாம், எச்சில் இலையில் உருள்வதை அடிப்படை உரிமையாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக