வியாழன், 30 மே, 2024

அப்பா வாங்கிய கடனுக்கு மகளுக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; தேனியில் அதிர்ச்சி

 nakkheeran.in  :  வாங்கியக் கடனை திருப்பிக் கொடுக்காததால் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தேனியில் பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் கடத்திச் சென்று காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிடப்பட்டது.


புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், தான் வாங்கிய கடன் தொகையைத் தராததால் தனது மகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர் கடத்திச் சென்று இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை ஒருவர் காணொளி எடுத்ததாகவும் இந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னையில் கும்பல் ஒன்றினால் பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து சென்னையில் 11 வயது சிறுமி ஒருவர்  சிறுவர்கள், அண்ணன் முறை கொண்ட சிறுவன் மற்றும் டெய்லர் என மூவரால் ஆறு மாதமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அப்பா வாங்கிய கடனுக்காக மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக