வெள்ளி, 17 மே, 2024

இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!

’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!

கலைஞர் செய்திகள்  ராஜசங்கீதன் :  'The Hindu' நாளிதழில் 'Heady electoral rhetoric with a hegemonic ring to it' என்கிற தலைப்பில் ஆசிம் அலி எழுதிய கட்டுரை ஒரு முக்கியமான வாதத்தை வைக்கிறது.
’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!
தேர்தலை ஜனநாயகத்தின் திருவிழா எனக் கூறியவர் நரேந்திர மோடி. ஜனநாயகத்துக்கு அது திருவிழாவோ இல்லையோ தெரியாது, ஆனால் பாஜகவுக்கு தேர்தல்தான் திருவிழா.
இந்திய ஜனநாயக வரலாற்றில் மக்கள் பிரச்சினைகள் தொடங்கி, ஜனாதிபதி தேர்வு வரை எல்லா விஷயங்களையும் தேர்தலை முன் வைத்து மட்டுமே தீர்மானிக்கும், இயக்கும், செயல்படும் கட்சி பாஜக மட்டும்தான்.


’இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி’ புத்தகத்தை எழுதிய சிவம் சங்கர் சிங், பிற கட்சிகளிலிருந்து பாஜக வேறுபடும் விஷயமாக இதைத்தான் குறிப்பிடுகிறார். பிற கட்சிகள் தேர்தல் வந்தால் மட்டும் தேர்தல் பணிகளுக்கான War Room அமைக்கும். பாஜகவிலோ தேர்தல் பணிகளுக்கான war room எப்போதுமே இயங்கும்.

இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல்கள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், பாஜக தனக்கான தேர்தல் வியூகங்களை முன் வைத்து பல வாரங்களாகி விட்டன. மோடி அளித்த உத்தரவாதங்கள்தான் பிரதான பிரசாரமாக முன்னெடுக்கப்படவிருக்கிறது.

இதைக் குறித்து 'The Hindu' நாளிதழில் Heady Electoral Rhetoric with a Hegemonic Ring to it என்கிற தலைப்பில் ஆசிம் அலி எழுதிய கட்டுரை ஒரு முக்கியமான வாதத்தை வைக்கிறது.
’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!

பாஜக ஆட்சியில் நிறைவேற்றியிருப்பதாக மோடி கொடுக்கும் உத்தரவாதங்களை இந்தியா டுடே நடத்திய Mood of the Nation கணக்கெடுப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஆசிம் அலி.

‘நம்பிக்கைக்குரிய ஒரு சூழலை பொற்காலத் தலைமுறைக்கு வழங்குதல்’ (A Promising Ecosystem for the Amrit Peedhi) என்கிற உத்தரவாதம், அடிப்படையில் புது வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. “2018-19-ல் 5.8%-மாக இருந்த வேலையின்மை விகிதம், 2022-23-ல் 3.2%-மாக குறைந்திருக்கிறது,” என சொல்கிறார்கள். ஆனால் யதார்த்தத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிருப்தி நிலவுவதாக கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் மூவரில் ஒருவர்தான் அரசாங்கம் இந்த விஷயத்தில் வெற்றியடைந்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.

அடுத்ததாக ‘மக்கள் நல’ உத்தரவாதத்திலும் (Welfare Guarantee) மக்களின் கருத்து வேறாக இருக்கிறது. 62% பேர் அன்றாட செலவுகளையே கையாள சிரமப்படுவதாகக் கூறியிருக்கின்றனர்.

‘விவசாயிகளின் முன்னேற்றம்’ (Empowering Annadata) அல்லது ‘நடுத்தர வர்க்கம் வெற்றி பெற்றிருக்கிறது’ (Middle Class Emerges a Winner) போன்ற உத்தரவாதங்கள் எப்படி இருக்கிறது?

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு அரசாங்க கொள்கைகளே காரணமென 45% பேர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘இந்தியப் பொருளாதாரம்; அனைவரையும் ஊக்குவிக்கும் கதை’ (Indian Economy: A Story that Inspires) என்கிற உத்தரவாதம் பற்றி என்ன கருத்து?

கால்வாசி மக்கள் மட்டும்தான் தங்களுடைய குடும்ப வருமானம் எதிர்காலத்தில் மேம்படும் என நினைக்கிறார்கள். மீத முக்கால்வாசி பேரோ இந்த நிலை இப்படியே நீடிக்கும் அல்லது மேலும் மோசமடையும் என நினைக்கிறார்கள்.

தீர்க்கமான குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் இடம் ஒன்று இருக்கிறது. அரசு கொள்கைகளினால் எந்தப் பிரிவுகள் அதிக பலன் அடைந்தன என்கிற கேள்விக்கு 52% பேர், பெருவணிகங்கள் என பதிலளித்திருக்கின்றனர். 9% பேர்தான் விவசாயிகள் பலனடைந்ததாகவும் 8% பேர் ஊதியம் பெறுவோர் பலன் அடைந்ததாகவும் 6% பேர் தினக்கூலி தொழிலாளர்கள் பலனடைந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!

இப்படி எந்த வகையிலும் யதார்த்தத்துடன் பொருந்தாத கூற்றுகளைதான், தங்களின் சாதனைகள் என எந்தக் கூச்சமுமின்றி சொல்கிறார் மோடி.

எல்லாவற்றையும் தாண்டி ’தாங்கள் மட்டும்தான் வெற்றியடைவோம்’ என்கிற கருத்தை விதைப்பதற்கான உளவியல் பூர்வமான பிரசாரத்தையும் பாஜக முன் வைப்பதாக கூறுகிறார் கட்டுரையாளர். அதற்கு உதாரணமாக இந்தியா டுடே கணக்கெடுப்பையே சுட்டிக் காட்டுகிறார் அவர்.

இந்திய மக்கள் ஒன்றிய பாஜக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தரவுப்பூர்வமாக நிறுவியிருக்கும் இந்தியா டுடே அக்கட்டுரைக்கு இட்ட முழுத் தலைப்பு என்ன தெரியுமா?

’பாஜக தலைமையிலான கூட்டணி 335-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும்’ என்பதுதான்!

இத்தனை அதிருப்தியுடன் மக்கள் இருக்கையில் எப்படி பாஜக கூட்டணி பெரும்பான்மை வெல்ல முடியும்?

இதைத்தான் உளவியல் பிரசாரம் என்கிறார் ஆசிம் அலி.

மக்களிடம் அதிருப்தி இருப்பதுதான் உண்மை. எனவேதான் கட்சிகள் உடைப்பது, எம்எல்ஏக்களை வாங்குவது, ரெய்டுகள் செய்வது என பெரும் பதற்றத்தில் பாஜக என்னன்னவோ செய்து வருகிறது.

அதிருப்திக்காகவா இத்தனை பதற்றம்?

இல்லை என்னும் ஆசிம் அலி, தோல்வி பயத்தால்தான் இந்தப் பதற்றம் எனக் குறிப்பிடுகிறார். அதற்கான காரணமாக அவர் சொல்வது ஒன்றைத்தான் .

‘இந்தியா’ கூட்டணி!
’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!

பாஜக போன்ற வலதுசாரி கட்சிகள் ஆட்சி பிடித்த வரலாற்றை லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்டு, அவை வீழ்ந்த விதத்தையும் சுட்டிக் காட்டுகிறார் கட்டுரையாளர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் 1980-களிலும் 90-களிலும் தனி நபர் ஆளுமை சார்ந்த வலதுசாரி அரசாங்கங்கள் எழுந்தன. அவை நவதாராளவாத கொள்கைகளை முன் வைத்து வென்று ஆட்சிகள் அமைத்தன. ஆனால் அந்த நவதாராளவாத கொள்கைகள், மக்களின் மத்தியில் கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தியது. நாட்டில் குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே செல்வத்தை சேர்க்கும் சூழலை அது உருவாக்கியது. அந்த குறிப்பிட்டக் கூட்டம்தான் அச்சமூகத்தின் மேலாதிக்க வர்க்கங்களாக இருந்தன. அவற்றின் ஆதரவில்தான் வலதுசாரிய அரசாங்கங்கள் ஆட்சியை தக்க வைத்திருந்தன.

2000-மாம் ஆண்டுகளில் இந்த வலதுசாரிகளுக்கு எதிரான சமூக ஜனநாயக சக்திகள் எழுந்தன. அவை பழைய இடதுசாரிய மரபிலான ‘உழைக்கும் வர்க்க உணர்வை’, விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுடன் சேர்த்து, மேலாதிக்கத்துக்கு எதிரான ஒரு கூட்டை உருவாக்கின.

இத்தாலியின் அந்தோனிய கிராம்சி பேசிய பண்பாட்டு மேலாதிக்கத்தின் தன்மையை புரிந்து அதற்கு எதிரான வர்க்கம், பாலினம், இனம் போன்றவை உள்ளடங்கிய ஒரு கூட்டை உருவாக்கியதில்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலதுசாரிய சக்திகள் சரிவை சந்தித்தன.

அதே போன்ற கூட்டுதான் ‘இந்தியா’ கூட்டணியும்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் சிறுபான்மையினரும் பெண்களும் சேர்ந்து தங்களை ஒடுக்கும் மேலாதிக்க வர்க்கத்துக்கு எதிராக கட்டியிருக்கும் அணிதான் ‘இந்தியா’ கூட்டணி.

சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் சாதிய பிரதிநிதித்துவம் போன்றவற்றை இந்தியா அணி பேசத் துவங்கியதிலிருந்து பாஜகவின் பதட்டம் கூடியிருக்கிறது என்கிறார் கட்டுரையாளர்.

மோடி, முன் வைக்கும் மேலாதிக்க ஆட்சிமுறைக்கு எதிராக இந்தியாவின் ஒடுக்கப்படும் பிரிவுகள் எல்லாமும் ஒன்றிணையும் மாறுபட்ட சிந்தனைதான் பாஜகவை வீழ்த்தும் என கட்டுரையை முடித்திருக்கிறார் ஆசிம் அலி.

ஆனால் அதைத் தடுப்பதற்காகவே, ’‘இந்தியா’ கூட்டணியில் ஒற்றுமை இல்லை’, ’நிர்வகிக்கும் திறன் அக்கூட்டணிக்கு இல்லை', ’தமிழ்நாட்டில் 20% பாஜக ஜெயிக்கும்’ போன்ற கற்பனைகளை விதைத்து உளவியல் தாக்கம் ஏற்படும் பிரசாரத்தை முன்னெடுக்கிறது பாஜக.
எனவே வாக்காளர்களே, கவனம் கொள்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக