சனி, 18 மே, 2024

5ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று முடிகிறது! ஸ்டார் வேட்பாளர் லிஸ்ட் ‛‛ராகுலும் இருக்காரே’’..

 tamil.oneindia.com - Nantha Kumar R :  : 5ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதன்மூலம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஸ் கோயல், லாலு பிரசாத் யாதவின் மகள் உள்பட பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் முடிந்தது. அதன்பிறகு ஏப்ரல் 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்து முடிந்தன.



மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் இந்த 4 கட்ட தேர்தல்களில் 379 தொகுதிகளுக்கு ஒட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

இந்நிலையில் தான் 5ம் கட்ட தேர்தல் என்பது நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் என்பது 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் 14 தொகுதி, மகாராஷ்டிராவில் 13 தொகுதி, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஒடிசா, பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், ஜார்கண்ட் 3 தொகுதி, லடாக் 1, ஜம்மு காஷ்மீர் 1 தொகுதி என 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டது. அதன்படி 5ம் கட்ட லோக்சபா தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.அதேபோல் காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

அதேபோல் பிற கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்தனர். இந்நிலையில் தான் 5ம் கட்ட தேர்தல் நடக்கும் 49 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

அதன்பிறகு வரும் 20ம் தேதி 49 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் களத்தில் உள்ளார். இவர் கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டுள்ள நிலையில் ரேபரேலியில் 2வது தொகுதியாக தேர்வு செய்துள்ளார்.

அதேபோல் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியிலும், ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியிலும் போட்டியில் உள்ளனர். அதேபோல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு தொகுதியில் வேட்பாளராக இருக்கிறார். இவர்கள் தவிர

பீகார் சாரன் தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா களம் காண்கிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் களம் காண்கிறார். உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் போட்டியிட்டுள்ளார்.

அதேபோல் பீகாரரில் .ள்ள சரண் தொகுதியில் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிட்டுள்ளார். பீகார் மாநிலம் ஹஜிபூர் தொகுதியில் லோக் ஜன்சக்தி கட்சியின் தேசிய தலைவரான சிராக் பஸ்வான் போட்டியிட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக