செவ்வாய், 21 மே, 2024

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் ஒருவர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

  BBC News தமிழ் - ஜோயல் கிண்டோ, சைமன் ஃப்ரேசர்
லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.


விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை பெயர் வெளியிடப்படாத இறந்தவரின் குடும்பத்திற்கு அந்நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

அந்த நபர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று பாங்காக்கில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது நிலை குறித்து தகவல்கள் இல்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, "சிலரது தலை பேக்கேஜ் கேபின்களின் மேல் இடித்து, அதைக் குழியாக்கி, விளக்குகள் மற்றும் முகமூடிகள் இருக்கும் இடங்களில் மோதி அவ்விடங்கள் உடைந்தன," என்றார் ஒரு பயணி

பயணிகள் சொல்வது என்ன?

பிபிசி-யிடம் பேசிய, அந்த விமானத்தில் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, "காபி என்மீது முழுவதும் கொட்டிவிட்டது" என்று கூறினார். "விமானத்தின் நிலை தாழ்ந்த சில வினாடிகளில், ஒரு பயங்கரமான அலறல் போன்ற ஒரு சத்தம் கேட்டது," என்றார்.

இந்தக் கொந்தளிப்பு நிலையடைந்தவுடன், 'தலையில் காயம்' ஏற்பட்டு 'வேதனையால் அலறிய' ஒரு பெண்ணுக்குத் தன்னால் உதவ முடிந்தது என்று ஆண்ட்ரூ கூறினார்.

பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தின் ஒரு சிறப்புப் பகுதியில் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஆண்ட்ரூ. "எனக்கு வேறொரு விமானம் கிடைக்கும். இவை மிகவும் அரிதான நிகழ்வுகள்," என்று அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய மற்றொரு பயணி, விமானம் திடீரென "மேல்நோக்கிச் சாய்ந்து, நடுங்கியது," என்றார்.

"நான் அடுத்து நடக்கப் போவதற்காக மனதளவில் தயாராகத் துவங்கினேன். திடீரென்று விமானத்தின் நிலை பயங்கரமாகத் தாழ்ந்தது. அதனால் அமர்ந்திருந்த மற்றும் சீட்பெல்ட் அணியாத அனைவரும் உடனடியாக விமானத்தின் மேற்கூரையில் சென்று மோதினர்," என்று 28 வயதான மாணவர் ஸஃபரான் ஆஜ்மீர் கூறினார்.

"சிலரது தலை பேக்கேஜ் கேபின்களின் மேல் இடித்து, அதைக் குழியாக்கி, விளக்குகள் மற்றும் முகமூடிகள் இருக்கும் இடங்களில் மோதி அவ்விடங்கள் உடைந்தன," என்றார்.

விமானத்தில் இருந்த 31 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமான நிறுவனம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பயணிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாகவும், கூடுதல் உதவி அளிக்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகாலக் குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்றார்.

"லண்டநில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?

இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொந்தளிப்பு (Turbulence) பொதுவாக விமானம் மேகத்தின் வழியாகப் பறக்கும்போது ஏற்படுகிறது. ஆனால் ரேடாரில் தெரியாத 'தெளிவான காற்றுக் கொந்தளிப்பும்' உள்ளது.

"பல லட்சம் விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான கொந்தளிப்பால் ஏற்படும் காயங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. இருப்பினும், கடுமையான கொந்தளிப்பு கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும், அல்லது துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தைப்போல உயிரிழப்புக்கு வழிவகுக்கும்," என்று விமான நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் பிபிசியிடம் கூறினார்.

கொந்தளிப்புகளைச் சமாளிப்பது எப்படி என்று விமானக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார் அவர்.
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் கடுமையான கொந்தளிப்பை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக