செவ்வாய், 21 மே, 2024

ALS ஏ எல் சீனிவாசன் கலைஞர் எம்ஜியார் ஜெயலலிதா -மூன்று முதல்வர்களுக்கும் சம்பளம் கொடுத்த திரை முதலாளி

May be an image of 2 people
May be an image of 2 people

Chandran Veerasamy :   நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பத்துப் படைப்பாளுமைகள் எனப் பட்டியலிட்டால் கவியரசர் கண்ணதாசனுக்கு நிச்சயம் இடமுண்டு.
அவரைப் பற்றி உரையாடி, நினைவு கூர்கிற அளவுக்கு, அவருடைய குடும்பத்திலிருந்து வந்து திரையுலகில் சாதனைத் தடம் பதித்தவர்கள் குறித்து நாம் பேசுவதில்லை.
கண்ணதாசனின் உடன்பிறந்த அண்ணன் ஏ.எல். கண்ணப்பனின் மகன் பஞ்சு அருணாசலம் ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக விளங்கினார். பாடலாசிரியராகவும் கவனிக்க வைத்தார். ஆனால், இவர்கள் அனைவருக்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் ‘ஏ.எல்.எஸ்’ என்று கம்பீரமாக அழைக்கப்பட்ட ஏ.எல்.சீனிவாசன். தமிழ் சினிமா தயாரிப்பிலும் தமிழ் சினிமாவுக்கு தேசிய அரங்கில் கவனம் பெற்றுக் கொடுத்ததிலும் பல முன்மாதிரிகளை உருவாக்கியவர்.


காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட ந.வெ. சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு ஆறு மகள்கள், மூன்று மகன்கள். அவர்களில் எட்டாவதாகப் பிறந்தவர் கவியரசர் கண்ணதாசன். 1923, நவம்பர் 23இல் ஆறாவதாகப் பிறந்தவர் ஏ.எல்.சீனிவாசன். கண்ணதாசனுக்கு இரண்டாவது அண்ணன். ஏ.எல்.எஸ்., சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வலர்.
ஏ.எல்.சீனிவாசன்
தனது ஊரிலிருந்து 8 மைல் தூரத்தில் உள்ள காரைக்குடிக்கு மிதி வண்டியில் வந்து இரண்டு திரைப்படங்களைப் பார்த்துத் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். 19 வயதில் சென்னை வந்த சீனிவாசன், ஏவி.மெய்யப்பன் நடத்தி வந்த கம்பெனியில் 40 ரூபாய் ஊதியத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். அப்போது, ‘ஜெமினி ஸ்டுடியோவைச் சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்கிற ஆர்வம் எழுந்தது.
அனுமதி கேட்டு எஸ்.எஸ்.வாசனுக்குக் கடிதம் எழுதினார். தாராளமாக வந்து பார்க்கும்படி வாசன் கையெழுத்திட்டு பதில் அனுப்பவே; அந்தக் கடிதத்துடன் ஜெமினி ஸ்டுடியோவுக்குள் கம்பீரமாக நுழைந்து சுற்றிப் பார்த்து ஆச்சரியப்பட்டார். வாசனைப் போல் ஒரு பெரிய ஸ்டுடியோ அதிபராகி, பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று 21 வயதில் லட்சியம் கொண்டார்.
வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த திருமலை, முத்துமாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து, ’கோயமுத்தூர் பிக்சர்ஸ்’ என்கிற பட விநியோகக் கம்பெனியை 1942இல் தொடங்கினார். அறிஞர் அண்ணாவுடன் ஏற்பட்ட நட்பால், ’வேலைக்காரி’ படத்தை முதன் முதலாக வாங்கி கோவை மண்டலத்தில் விநியோகம் செய்ய, கைநிறைய லாபம். அதன்பிறகு படங்களை வாங்க சென்னைக்கு வந்து சென்ற ஏ.எல்.எஸ்., தமிழ் சினிமாவின் பேட்டை சென்னைதான் என்பதை உணர்ந்துகொண்டு சென்னையிலேயே தனது அலுவலகத்தை அமைத்தார்.
பட விநியோகத்தில் 10 ஆண்டு களைச் செலவழித்திருந்த ஏ.எல்.எஸ்., 19 வயதில் வரித்துக்கொண்ட லட்சியத்தை தனது 28வது வயதில் வென்றெடுத்தார். ஆம்! 1951இல் ‘மெட்ராஸ் பிக்சர்ஸ்’ என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அவர் முதன் முதலாக தயாரித்த படம் ‘பணம்’. கலைஞர் மு.கருணாநிதி கதை, வசனம் எழுத, என்.எஸ்.கிருஷ்ணன் படத்தை இயக்கினார். சிவாஜி - பத்மினி முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இருவரையும் இணைந்து பணிபுரிய வைத்து அவர்களை இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தினார்.
‘பணம்’ படத்தில் தொடங்கி ‘சினிமா பைத்தியம்’ வரை அடுத்து வந்த 25 ஆண்டுகள் இடைவிடாமல் 29 படங்களைத் தயாரித்திருக்கிறார். கலைஞர், எம்.ஜி.ஆர்., இருவருக்குமே நெருங்கிய நண்பராக விளங்கிய ஒரே பட அதிபர் ஏ.எல்.எஸ். மட்டும்தான். கலைஞரின் வீட்டருகிலேயே தனது வீடும் அலுவலகமும் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஏ.எல்.எஸ்., கோபாலபுரம் அருகில் உள்ள ரத்னா தெருவில் வீடு வாங்கி குடியேறினார்.
ஏ.எல்.எஸ். பட உலகில் பல முன்மாதிரிகளை உருவாக்கியவர். அதில் முக்கியமானது ‘நெகடிவ் ரைட்ஸ்’ முறை. படத்தை எடுத்து முடித்துவிட்டு, படத்தை வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள், படம் வெற்றியடையுமா, தோல்வி அடையுமா எனக் குழம்பி நிற்பவர்கள் அனைவரும் தஞ்சம் அடைந்தது ஏ.எல்.எஸ்ஸிடம்தான்.
அப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாக, அவர்களிடமிருந்து படத்தின் ‘நெகடிவ் ரைட்ஸ்’ உரிமையை வாங்கி தனது ‘நெட் ஒர்க்’ மூலம் படத்தை வெளியிட்டு வந்தார். இதில் பல வெற்றிகளும் பல தோல்விகளும் கிடைத்தாலும் நம்பி வருகிறவர்களை அவர் திருப்பி அனுப்பவில்லை.
ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பின் பட்ஜெட்டில் ஸ்டுடியோவுக்கான கட்டணம் கணிசமான தொகையாக இருந்ததால், தாமும் கட்டுகோப்பாக படமெடுக்க விரும்பும் தயாரிப்பாளர்களும் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் முதலில் நடிகர் பானுமதிக்குச் சொந்தமான பரணி ஸ்டுடியோவையும் பின்னர் மெஜஸ்டிக் ஸ்டுடியோவையும் குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.
மெஜஸ்டிக் ஸ்டுடியோவின் பெயரை சாரதா ஸ்டுடியோ என்று மாற்றினார். இங்கேதான் எம்.ஜி.ஆருக்கு முதல் சமூகப் படமாக அமைந்த ‘திருடாதே’, சிவகுமாருக்கு திருப்புமுனையாக அமைந்த ‘கந்தன் கருணை’ , பீம்சிங்கை இயக்குநராக அறிமுகப்படுத்திய ‘செந்தாமரை’ தொடங்கி பல வெற்றிப் படங்கள் படமாக்கப்பட்டன. பி.மாதவன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கன்னட சினிமாவில் முத்திரை பதித்த புட்டண்ணா கனகல், ஆயிரம் படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ் என இவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்களின் கலைஞர்களின் பட்டியல் மிகப்பெரியது. அறிமுகக் கலைஞர்களே என்றாலும் அவர்களுக்குக் கைநிறைய ஊதியம் கொடுத்தவர் என்கிற பெயர் ஏ.எல்.எஸ்ஸுக்கு உண்டு.
 ஏ.எல்.எஸ்., 1964 தொடங்கி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக மூன்று முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தில் பல அரிய செயல்களைச் செய்து முடித்தவர். பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுக்குக் கொண்டுவருவதில் ‘மன்னர்’ என்று பெயர் வாங்கினார். தம்பி கண்ணதாசனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்.
திரையுலகின் அனைத்துத் துறைகளிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்துகொண்டே, சினிமாவின் தீமைகளை விமர்சித்து ‘சினிமா பைத்தியம்’ என்கிற சிறந்த சமூகச் சீர்திருத்த சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர். ‘பணம்’ படத்தில் கலைஞர் மு.கருணாநிதிக்கும் ‘திருடாதே’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் ‘கந்தன் கருணை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் என தமிழ்நாட்டின் மூன்று முதலமைச்சர்களுக்கு ஊதியம் வழங்கிய ஏ.எல்.எஸ்., தமிழ் சினிமாவின் தனிப்பெரும் தலைமைகளில் ஒருவர்.
- ஆர்.சி.ஜெயந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக