திங்கள், 27 மே, 2024

ராணுவத் தளபதிக்கு கால நீட்டிப்பு! மோடியின் அசாதாரண நடவடிக்கை ஏன்?

 மின்னம்பலம் -  Aara  :  ராணுவத் தளபதிக்கு கால நீட்டிப்பு! மோடியின் அசாதாரண நடவடிக்கை ஏன்?
வழக்கத்துக்கு மாறான, மிகவும் அசாதாரணமான நடவடிக்கையாக தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு இந்திய அரசு ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற உள்ளார். இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார்.
பொதுவாக ராணுவ தளபதி 62 வயது வரை அல்லது மூன்று ஆண்டுகள், எது முந்தையதோ அதுவரை பணியாற்றுவார். இந்திய ராணுவ வரலாற்றில் ராணுவ தளபதி ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதலாவது முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஆறு மாத கால நீடிப்பு பெற்றார்.



இரண்டாவது ஜெனரல் ஜி ஜி பேவூர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டார்.
மூன்றாவதாக இப்போதைய மோடி அரசால் அதுவும் தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில தினங்கள் முன்பாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வழக்கமாக ராணுவத் தளபதி ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் துணைத் தளபதிதான் தளபதியாக நியமிக்கப்படுவார். அந்த வகையில் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி அந்த இடத்தில் இருக்கிறார்.

ஆனால், அவர் நியமிக்கப்படாமல் ஒரு மாதம் ராணுவத் தளபதிக்கு நீட்டிப்பு வழங்கியிருப்பதன் மூலம் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியை பணி மூப்புக்கு பதிலாக தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. மேலும், தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் ராணுவத்தில் வழக்கமாக நடக்கும் அதிகார பரிமாற்றம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும், இந்த அரசின் கடைசி நாட்களில் கடைசி நிமிட ஆச்சரியமாக, நரேந்திர மோடி அரசாங்கம் இராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கியது விவாதமாகவும் மாறியிருக்கிறது.
அதேநேரம், ஜெனரல் பாண்டேவுக்கு இந்த அசாதாரணமான நீட்டிப்புக்கு அரசாங்கம் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அடுத்த பதினைந்து நாட்களில் பதவியேற்கும் அடுத்த அரசாங்கத்திற்கு முடிவை விட்டுவிட விரும்புவதாக ஊகங்கள் பரவலாக உள்ளன.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக