சனி, 27 ஏப்ரல், 2024

இலங்கை Chirch குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் (RAW) – விமல் வீரவன்ச

Shri Ajit Kumar Doval (@iam_ajitdoval ...
Ajith doval
21st June as Canada Genocide Day ...
wimal weerawansa

வீரகேசரி: இலங்கை சேர்ச் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் – விமல் வீரவன்ச
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .
எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.

பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.

பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக