திங்கள், 29 ஏப்ரல், 2024

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி .. தீர்ப்பு விபரங்கள் நாளை .. சிறையில் அடைக்கப்பட்டார்

;hindutamil.in : பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக புகார்
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கில் இன்று(ஏப். 29) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.
இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

அதையடுத்து, நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (ஏப். 29) தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக