சனி, 13 ஏப்ரல், 2024

ரூ.2 லட்சம் சம்பளத்தில் ரஷ்யாவில் வேலை என்று நம்பிச் சென்ற கேரள இளைஞர்களுக்கு நடந்த கொடுமை

BBC Tamil  : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முகநூலில் ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த டேவிட் மூத்தப்பன். அதற்கான மாதச் சம்பளம் 2,04,000 ரூபிள் (ரூ.1,82,280) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளிப் படிப்பை கூட தாண்டாத மீனவரான டேவிட்டுக்கு அது பெரும் தொகை.
உடனடியாக ஒப்புக்கொண்டு ரஷ்யாவுக்கும் சென்றுவிட்டார் அவர். ஆனால், அங்கு நடந்ததோ வேறு.
சில வாரங்கள் கழித்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் நகரில் போர்முனையில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் டேவிட்.
அங்கிருந்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, ​​”எங்கு பார்த்தாலும் மரணமும், அழிவும் நிறைந்திருந்தது,” என்று கூறுகிறார் அவர்.  பல சோதனைகளைக் கடந்து இவரும், கேரளாவைச் சேர்ந்த மற்றொருவரும் கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா-யுக்ரேன் போரில் சண்டையிடுவதற்காக போலி முகவர்களால் ஏமாற்றி ரஷ்யா அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் இவர்கள் இருவரும் அடக்கம்.


படக்குறிப்பு, ரஷ்ய – யுக்ரைன் போரில் எங்கு பார்த்தாலும் மரணமும், அழிவும் நிறைந்திருந்தது என்று கூறுகிறார் டேவிட்

யுக்ரேன் போருக்கு ஏமாற்றி அனுப்பப்படும் இந்தியர்கள்

அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இன்னும் பலர் தற்போதும் ரஷ்யாவில் சிக்கியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர் பணி உட்பட வேறு விதமான பணிகள் தருவதாக அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படையில் அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

இதுவரை ரஷ்யா-யுக்ரேன் போரில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

படக்குறிப்பு, ரஷ்யாவில் வேலை என்று ஏமாற்றி அழைத்துச்செல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த டேவிட் மூத்தப்பன்

வேலை தருவதாக ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்காக ரஷ்ய அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவைப் பொறுத்தவரை இது ‘மிக மிக தீவிரமான கவலைக்குரிய விஷயம்’ என்று கூறினார். இதுகுறித்து கருத்து கேட்டு இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியது டேவிட்டுக்கு மனநிம்மதியை கொடுத்தாலும் கூட, போரில் நடந்த சம்பவங்கள் என்றும் மறக்க முடியாதது என்று கூறுகிறார் அவர்.

“எங்கு பார்த்தாலும் உடல் பாகங்கள் தரையில் சிதறிக் கிடந்தன,” என்று கூறினார் அவர். இதனால் மனமுடைந்த அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டாராம்.


படக்குறிப்பு, ரஷ்ய போரில் எங்கு பார்த்தாலும் உடல் பாகங்கள் தரையில் சிதறிக் கிடந்ததை பார்த்து வாந்தி எடுத்து மயங்கி விட்டாராம் டேவிட்.

இந்தியர்கள் மூலம் உதவி

“அதனால் எங்களுக்கு தலைமையேற்றிருந்த ரஷ்ய அதிகாரி என்னை முகாமுக்குத் திரும்பச் சொன்னார். அதிலிருந்து நான் குணமடைய பல மணிநேரம் ஆனது,” என்றார் அவர்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் புறநகர் பகுதி ஒன்றில் அவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவரது கால் முறிந்து விட்டதாம். அந்த சமயத்தில் தனது நிலை குறித்து அவரது குடும்பத்திற்கு எதுவும் தெரியாது என்று கூறினார் டேவிட்.

அவர் ஓரளவு குணமடைவதற்கு முன்பு லுஹான்ஸ்க், வோல்கோகிராட் மற்றும் ரோஸ்டோவ் ஆகிய இடங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் இரண்டரை மாதங்கள் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தியர்கள் குழு ஒன்று மார்ச் மாதம், அவருக்கு மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அடைய உதவியுள்ளது. அதன் பின்னரே அவர் வீட்டிற்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


படக்குறிப்பு, டேவிட்டை போலவே ஏமாற்றப்பட்டு ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பிரின்ஸ் செபாஸ்டியனும் ஒருவர்

காதுக்குக் கீழே பாய்ந்த குண்டு

டேவிட் போலவே கேரளாவின் மற்றொரு மீன்பிடி கிராமமான அஞ்சுதெங்குவில் உள்ள பிரின்ஸ் செபாஸ்டியனும் இதே போன்ற மோசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஒரு உள்ளூர் முகவரால் ஏமாற்றப்பட்ட அவர், ரஷ்ய ஆக்கிரமிப்பு கிழக்கு உக்ரேனிய நகரமான லிசிசான்ஸ்கில் 30 வீரர்கள் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெறும் மூன்று வாரப் பயிற்சிக்குப் பிறகு, RPG-30 ராக்கெட் லான்ச்சர் மற்றும் வெடிகுண்டுகள் உட்பட பல ஆயுதங்களுடன் போரின் முன்கள பகுதிக்கு அவர் அனுப்பப்பட்டதாக கூறினார்.

போரின் முன்களத்திற்கு சென்ற 15 நிமிடத்திலேயே இவருக்கு அருகில் பாய்ந்து வந்த குண்டு ஒன்று இவரது காதுக்கு கீழே சீறிபாய்ந்துள்ளது. இதனால் கால் இடறி இறந்த ரஷ்ய ராணுவ வீரர் மீது விழுந்துள்ளார் இவர்.

“நான் அதிர்ச்சியடைந்து விட்டேன், என்னால் நகரவே முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு வெடிகுண்டு வெடித்தது. அது எனது இடது காலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது,” என்று கூறினார் பிரின்ஸ்.


படக்குறிப்பு, பலத்த காயத்துடன் ஒரு நாள் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்துள்ளார் பிரின்ஸ்

இதுவரை நான்கு புகார்கள்

ரத்தம் சொட்ட சொட்ட அந்த இரவை ஒரு பதுங்கு குழியில் கழித்த அவர், மறுநாள் காலை அங்கிருந்து தப்பித்து அதற்கு பின் சில நாட்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பிறகு அவருக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைத்தது. இந்த நேரத்தில், ஒரு பாதிரியார் அவருக்கு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவியதால், தூதரக உதவியுடன் நாடு திரும்பினார் பிரின்ஸ்.

தன்னுடன் வந்த இரண்டு மீனவ நண்பர்களை காணவில்லை என்றும், இதுவரை தனக்கோ அல்லது அவர்களின் குடும்பத்திற்கோ அந்த இருவர் குறித்து எந்த வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

இதுவரை போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டதாக டேவிட் , பிரின்ஸ் மற்றும் அவர்களது இரண்டு நண்பர்களின் குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு புகார்கள் வந்துள்ளதாக கேரள அதிகாரிகள் கூறுகின்றனர்.

தனது பயணம் குறித்து பேசிய பிரின்ஸ், அவரும் அவரது நண்பர்களும் ஐரோப்பாவில் எங்காவது வேலை கிடைக்குமா என்று பார்க்க தங்கள் கிராமத்தில் உள்ள உள்ளூர் முகவரிடம் சென்றதாக கூறினார். ( தற்போது அந்த முகவர் தலைமறைவாக உள்ளார்.)


படக்குறிப்பு, ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர்

பாஸ்போர்ட், கைபேசியைப் பறித்த ராணுவத்தினர்

ரூ.2,00,000 மாதச் சம்பளத்தில் செக்யூரிட்டி வேலை செய்வதற்கு ஒரு ‘பொன்னான வாய்ப்பு’ ரஷ்யாவில் இருப்பதாக கூறியுள்ளார் அந்த முகவர். உடனே இவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரஷ்ய விசா பெறுவதற்காக இவர்கள் அந்த முகவரிடம் தலா ரூ.7,00,000 கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஜனவரி 4 அன்று, இவர்கள் அனைவரும் மாஸ்கோவை அடைந்துள்ளனர். அங்கு மலையாளம் பேசும் அலெக்ஸ் என்ற இந்திய முகவர் ஒருவர் இவர்களை அழைத்து சென்றுள்ளார்.

அன்று இரவு குடியிருப்பு ஒன்றில் இரவை கழித்த பிறகு, மற்றொரு நபர் இவர்களை 336கி.மீ. தொலைவில் கோஸ்ட்ரோமா நகரத்தில் உள்ள ஒரு இராணுவ அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாகவும், அதில் ஒன்றுமே தங்களுக்கு புரியவில்லை என்றும் பிரின்ஸ் கூறுகிறார்.

பிரின்ஸ் மற்றும் அவரது நண்பர்களுடன் மூன்று இலங்கையை சேர்ந்தவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் ஆறு பேரும் யுக்ரேன் எல்லையில் உள்ள ரோஸ்டோவ் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களது பாஸ்போர்ட் மற்றும் மொபைல் போன்கள் அதிகாரிகளால் பறிக்கப்பட்டுள்ளது.


படக்குறிப்பு, ப்ரின்ஸின் மீனவ நண்பர்களின் குடும்பங்கள் அவர்களது வருகைக்காக காத்திருக்கிறது

இரவு பகல் பாராமல் ஆயுதப் பயிற்சி

ஜனவரி 10-ஆம் தேதி இவர்களுக்கான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதில் கையெறி குண்டுகளை வீசுவது, காயம் பட்டால் என்ன செய்வது போன்றவை இவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின், அலபினோ பாலிகான் என்ற இரண்டாம் தளத்திற்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு இரவு பகல் பாராமல் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

“அங்கு தங்களுக்காக எல்லா வகையான ஆயுதங்கள் காத்திருந்ததாகவும், அவற்றை பொம்மைகளை போல் பார்த்து தான் மகிழ்ந்ததாகவும்,” கூறுகிறார் பிரின்ஸ்.

அதன்பிறகே போர்க்களம் தனது கோரமுகத்தை அவருக்குக் காட்டியுள்ளது.

இப்போது மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலை தொடங்கலாம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பிரின்ஸ், “கடன் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் மற்றும் எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும்,” என்கிறார்.


படக்குறிப்பு, பிரின்ஸ் மற்றும் டேவிட் மீண்டும் மீன்பிடி தொழிலுக்கே செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்

‘போர்க்களத்தில் யாரையும் கொல்லவில்லை’

பொழியூரில் இருக்கும் டேவிட்டும் இதே நம்பிக்கையில் தான் இருக்கிறார்.

“நான் ரஷ்யாவுக்கு கிளம்பும் போது எனது கிராமத்தில் ஒரு பெண்ணுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அங்கு சென்று பணத்துடன் திரும்பி வந்து எங்கள் திருமணத்திற்கு முன்பு வீடு கட்டி விடுவேன் என்று கூறி விட்டு சென்றேன்,” என்கிறார் டேவிட்.

தற்போது அவர் மீண்டும் தனது வாழ்க்கையை விட்டதில் இருந்து தொடங்க வேண்டும் என்பதால், அந்த இளம் ஜோடிகள் திருமணத்திற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

தனது வாழ்க்கையே தலைகீழாக மாறியிருந்தாலும், அங்கு போர்க்களத்தில் யாரையும் கொல்லவில்லை என்பதில் டேவிட்டுக்கு மகிழ்ச்சி.

“ஒரு முறை, சுமார் 200மீ தொலைவில் இருந்த யுக்ரேனியர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நான் அவர்களை நோக்கி ஒருமுறை கூட சுடவில்லை. என்னால் யாரையும் கொல்ல முடியாது,” என்று கூறினார் டேவிட்.

பிபி சி செய்தி: அஷ்ரப் பதன்னா- பிபிசிக்காக, திருவனந்தபுரத்திலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக