திங்கள், 11 மார்ச், 2024

அனுப்புநர் அனுப்புனர் ஆளுநர் ஆளு ன ர் இயக்குநர் இயக்கு ன ர் எது சரி?

May be an image of 4 people, slow loris, train and text that says 'நடத்துநர் ஒட்டுநர்'

Thulakol Soma Natarajan  :  அனுப்புநர், ஆளுநர், இயக்குநர்
 ஒட்டுநர், நடத்துநர் போன்ற  சொறகள்தான்
பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையும்
அனுப்பு ன ர்
ஆளு ன ர்
இயக்கு ன ர்
ஓட்டு ன ர்
நடத்து ன ர்
எனத்  தவறாக எழுதுகின்றனர்.
இது குறித்து ஓர் கட்டுரையைப்
புலனத்தில் (WhatsApp ) படிக்க நேர்ந்தது.
அதில் எத்துணை எத்துணை "நர்கள்
உள்ளனர் என்பதை அறிய வியப்பு மேலிடுகிறது !
நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள்,
படித்து, சுவைத்து, உணர்ந்து  மகிழுங்கள்.
நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.
‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’ வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.


அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’
இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.
இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.
மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.
செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
மங்குநர் (மங்குபவர்)
உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
திரிகுநர் (திரிபவர்)
வாங்குநர் (வாங்குபவர்)
காக்குநர் (காப்பாற்றுபவர்)
நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
செய்குநர் (செய்பவர்)
மகிழ்நர் (மகிழ்பவர்)
உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
அறிகுநர் (அறிந்தவர்)
கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
உணர்குநர் (உணர்பவர்)
சோருநர் (சோர்வடைந்தவர்)
செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
ஆகுநர் (ஆகிறவர்)
வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
மறைக்குநர் (மறைக்கிறவர்)
புரிகுநர் (செய்பவர்)
ஆடுநர் (ஆடுபவர்)
பாடுநர் (பாடுபவர்)
இருக்குநர் (இருக்கின்றவர்)
இடிக்குநர் (இடிக்கின்றவர்)
முடிக்குநர் (முடிக்கின்றவர்)
தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
வீழ்குநர் (வீழ்பவர்)
என்குநர் (என்று சொல்கிறவர்)
தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
கொல்லுநர் (கொல்பவர்)
இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
சாருநர் (சார்ந்திருப்பவர்)
உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)
முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!
ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம்
    தொகுப்புப் பதிவு
⚖️  துலாக்கோல்/ 11.3.2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக