திங்கள், 11 மார்ச், 2024

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா - காங்கிரஸ் எழுப்பும் சந்தேகம் என்ன?

bbc.com  : நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை (மார்ச் 9) அன்று தனது பதவியயை ராஜினாமா செய்திருக்கிறார். அருண் கோயலின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.அரசியல் மட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அருண் கோயல், பஞ்சாப் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.


இதுதொடர்பாக, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023, பிரிவு 11, உட்கூறு 1-இன் படி, தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர், 2022-ல் திடீரென தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதைப் போன்றே அவருடைய ராஜினாமாவும் ஆச்சர்யமளிப்பதாக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சமயத்தில், அவரின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


37 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய அருண் கோயல், டிசம்பர் 31, 2022 அன்று ஓய்வு பெறவிருந்தார். ஆனால், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 18 நவம்பர் 2022 அன்று அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

ஒருநாள் கழித்து, 19 நவம்பர் 2022 அன்று, குடியரசுத் தலைவர் அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தார். 15 மே 2022 முதல் காலியாக இருந்த இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 21 நவம்பர் 2022 அன்று அருண் கோயல் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

2022-ஆம் ஆண்டு அருண் கோயல் நியமிக்கப்பட்டபோது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமன செயல்முறை தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

தேர்தல் மற்றும் அதுதொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மைக்காக செயல்படும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், அருண் கோயலின் நியமனம் ஒருதலைபட்சமானது எனக்கூறி, அவரின் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

தான் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் தகவல் அருண் கோயலுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்றும் அதனாலேயே அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற்றார் என்றும் அந்த அமைப்பு வாதாடியது. இந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அருண் கோயல் ராஜினாமா தொடர்பாக, சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில், “இது தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா? (Election Omission) இந்தியாவில் தற்போது ஒரேயொரு தேர்தல் ஆணையர் தான் உள்ளார். ஏன்?

"நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திரமான நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்,” என தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் ஆணையாளர்களை தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறையின்படி ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் அனைத்து அதிகாரத்தையும் வழங்கியிருந்தும் பிப்ரவரி 23-ஆம் தேதி பதவிக்காலம் முடிந்த பின்னரும் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்? இந்த கேள்விகளுக்கு மோதி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்,” எனவும் கார்கே தெரிவித்துள்ளார்.

அருண் கோயல் ராஜினாமா செய்தது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம், ஓர் அரசியலமைப்பு நிறுவனம். அருண் கோயல் ராஜினாமா தொடர்பாக மூன்று விஷயங்கள் எனக்கு தோன்றுகின்றன.

"ஒன்று, அவருக்கும் தலைமை தேர்தல் ஆணையருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தனவா? மோதி அரசாங்கத்திற்கும் அருண் கோயலுக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்ததா? இரண்டாவது, அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருந்திருக்கலாம். மூன்றாவது, பா.ஜ.க சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்காக அவர் ராஜினாமா செய்தாரா? இந்த கேள்விகளுக்கு இன்னும் சில நாட்களில் தெளிவு கிடைக்கும்,” என தெரிவித்தார்.

அருண் கோயல் யார்?
மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மும்முரமாக தயாராகி வரும் வேளையில், அதிகாரிகள் நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் நிலையில், அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம்.

தேர்தல் ஆணையராக இருந்த அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். கோயல் ராஜினாமா செய்த பிறகு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 1962-ஆம் ஆண்டு பிறந்த கோயல், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு பெறும் போது, ​​கனரக தொழில்துறை அமைச்சகத்தில் அருண் கோயல் செயலாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன், அவர் கலாசார அமைச்சகத்தில் செயலாளராகவும், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

கனரக தொழில்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்தபோது, ​​​​இ-வாகனங்களை மேம்படுத்துவதில் அருண் கோயல் பணியாற்றினார். இந்த நேரத்தில், அவர் வாகனத் தொழிலுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், இந்தத் துறையில் முதலீட்டை அதிகரித்தார்.

அவர் பஞ்சாப் அரசாங்கத்திலும் சில காலம் பணியாற்றினார். புதிய சண்டிகரின் 'மாஸ்டர்பிளான்’-ஐ (முதன்மைத் திட்டம்) செயல்படுத்துவதிலும் எரிசக்தி துறையில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதிலும் தலைமைச் செயலாளராக முக்கிய பங்கு வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக