வியாழன், 28 மார்ச், 2024

கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை! - வைகோ இரங்கல்!

 மின்னம்பலம் - ஆரா : ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்.
பின்னர், அண்ணன் வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



மக்கள் நலனே கடமை என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி: வைகோ இரங்கல்!
மக்கள் நலனே தன்னுடைய கடமை என்று வாழ்ந்த கணேசமூர்த்தி, இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மார்ச் 28) இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, இன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை விமான நிலையத்திற்கு வைகோ வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சென்னை தியாகராயர் கல்லூரியில் திமுக மாணவர் தலைவராக கணேசமூர்த்தி இருந்தார். அப்போது அறிஞர் அண்ணாவுக்கு நன்கு பரிச்சயமானார். கொள்கையும் லட்சியமும் தான் பெரிது என்று வாழ்ந்தார்.

ஆனால், சமீப காலமாக அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் முருகன், செந்தில் மற்றும் கணேச மூர்த்தியின் மகன் கபிலன் ஆகியோர் என்னிடம் சொன்னார்கள். அதை நான் இங்கே விவரிக்க விரும்பவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுப்பது என்ற பிரச்சனையில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். சீட் அறிவித்த பிறகும் கூட என்னிடம் பேசினார். நானும் அவரிடம் நன்கு பேசிக்கொண்டு தான் இருந்தேன்.

அவரை நான் தான் முதன் முதலில் டாக்டர் தணிகாசலத்திடம் இருதய சிகிச்சைக்காக அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னை வருவார். டாக்டர் தணிகாசலத்தையும் என்னையும் பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவார்.

திராவிட இயக்கத்திற்கு ஒரு பெரும் தூணாக கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்த அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

அவ்வளவு பெரிய இடி தலையில் விழுந்ததை போல உணருகிறேன். அவர் இந்த இயக்கத்திற்கும் பொதுமக்களுக்காகவும் பணியாற்றியிருக்கிறார். விவசாயிகளுக்காக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். மக்கள் நலனே தன்னுடைய கடமை என்று வாழ்ந்த கணேசமூர்த்தி, இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை” என்ற வைகோ கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, “அவர் மறைந்தார் என்ற செய்தியை கேட்பதற்கு முன்பு மருந்து குடித்துவிட்டார் என்று சொன்னபோதே எனக்கு உயிரெல்லாம் போய்விட்டது. எவ்வளவு துணிசலான மன உறுதிவாய்ந்தவர் அவரா இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று எண்ணினேன்.

இதற்கு மத்தியில் கணேசமூர்த்திக்கு எம்.பி சீட் கிடைக்காததால் தான் வருத்தத்தில் தற்கொலை முயற்சி செய்தார் என்று ஏடுகளில் செய்தி வெளியானது. அது ஒரு சதவிகிதம் கூட உண்மையல்ல. கணேசமூர்த்தியின் மகளையோ, மகனையோ, மாவட்ட செயலாளர்களையோ, கட்சி தோழர்களையோ கேட்டால் தெரியும்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி எங்களை நட்டாத்திலே விட்டுவிட்டு போவார் என்று நினைக்கவேயில்லை. நானும் அவரும் சிறையில் 19 மாத காலம் இருந்தோம். அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. உடனே வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து மூன்று பஸ்களில் வேலூர் சிறைக்கே தோழர்கள் வந்து கண்ணீர் வடித்தார்கள்.

நான் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினேன். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘இதையெல்லாம் அரசியலில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன், இதைப்பற்றியெல்லாம் நாம் வருத்தப்படக்கூடாது’ என்று சொல்லக்கூடிய மனோநிலையில் தான் கணேசமூர்த்தி இருந்தார்.

இத்தனை ஆண்டுகளில் எந்த பதவியும் இல்லை என்று அவர் கவலைப்பட்டது கிடையாது. அப்படிப்பட்ட கணேசமூர்த்தி திராவிட இயக்க சரித்திரத்தில் கொங்கு மண்டலத்தில் அழியா புகழோடு ஒரு நட்சத்திரமாக என்றைக்கும் திகழ்வார். மதிமுக சார்பில் அவரது மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
செல்வம்

பாஜக தலைவர் அண்ணாமலை

ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கணேசமூர்த்தி  குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக