வெள்ளி, 8 மார்ச், 2024

திமுக கூட்டணியில் உறுதியான இறுதிவடிவம்! காங்கிரஸுக்கு சறுக்கல்!

 tamil.samayam.com - மரிய தங்கராஜ் : திமுக கூட்டணி மிக வலுவாக 2019 முதல் தொடர்ந்து வந்தாலும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தற்போது நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இறுதிகட்டத்தை எட்டாமல் இழுபறி நீடித்து வருவது அந்த கூட்டணி குறித்த பேச்சுக்களை தமிழக அரசியல் களத்தில் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது.
இணக்கமாக செயல்பட்டு வரும் கட்சிகள் அணி மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பது வரை பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டை முடிக்காத காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் கட்டாயம் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்று தெளிவுபடுத்திவிட்டன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் இந்த முறை ஒதுக்க உள்ளனர் என்பது கிட்டதட்ட உறுதியாகி அந்தந்த கட்சிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாம். ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள், உதயசூரியன் எத்தனை தொகுதிகளில் களம் காணப் போகிறது என்பதை பார்க்கலாம்.


2019 மக்களவைத் தேர்தல் நிலவரம்!
கடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டது. விசிகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டார். மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈரோட்டில் கணேச மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தங்களது ஏணி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் உதய சூரியன் சின்னத்தில் களம் கண்டன.

அந்த வகையில் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 24 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு அத்தனை பேரும் வெற்றி பெற்றனர். மதிமுகவுக்கு மட்டும் திமுக சார்பில் மாநிலங்களவை இடம் ஒன்றும் வழங்கப்பட்டது.


இந்த முறை திமுக தான்போட்டியிடும் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளை தொடர்ந்து உதயசூரியன் சின்னத்திலேயே களமிறக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது.


கடந்த தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தோல்வியடைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் இடங்களை குறைத்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக 22 இடங்களில் களமிறங்க உள்ளதாம். விசிக 3 கேட்ட நிலையில் 2ஐ உறுதி செய்து இரண்டிலும் பானை சின்னத்தில் நிற்க திமுக சம்மதித்துள்ளது. மதிமுக ஒரு தொகுதியில் மீண்டும் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க உள்ளதாம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளில் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில் ஓட்டையா.. யாருங்க சொன்னா? தீர்மானமே நிறைவேற்றிய வைகோ!
பார்வேந்தர் வெளியேறிய நிலையில் புதுவரவாக வரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படுகிறது. அதில் டார்ச் லைட் சின்னத்தில் தான் நிற்பேன் என்று வலியுறுத்திப் பேசியுள்ளதால் திமுக அதற்கு சம்மதித்துள்ளதாம்.

காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து 8 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் திமுக கடந்த முறையை விட கூடுதலாக 2 இடங்களில் அதாவது 22 இடங்களில் போட்டியிட உள்ளது. உதயசூரியன் சின்னம் 24 தொகுதிகளில் களமிறங்க உள்ளது.

மதிமுக கேட்ட மாநிலங்களவை இடமும் வைகோவுக்காக கடைசி நேரத்தில் ஓகே ஆகியுள்ளதாக கூறுகின்றனர்.

தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக