திங்கள், 4 மார்ச், 2024

திமுக கூட்டணியில் சீறும் சிறுத்தைகள்... அன்புமணி வெயிட்டிங்!

 minnambalam.com -  Aara  : திமுக கூட்டணியில் மூன்று இடங்களை கேட்டு திரும்பத் திரும்ப வற்புறுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
நேற்று மார்ச் 2 ஆம் தேதி பகல் 12 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தொகுதி உடன்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அறிவாலயம் செல்லாமல் உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார் திருமாவளவன்
அதற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், ‘நாங்கள் திமுக கூட்டணியில் தான் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால், மூன்று தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.


இதுகுறித்து திமுகவிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவோம்.
தேவைப்பட்டால் முதல்வரையும் சந்திப்போம்’ என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன்.
இன்று மார்ச் 3 ஆம் தேதியும் அதையே உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது , “விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் என்பது முடிவு செய்யப்பட்டது. இப்போது திருமாவுக்கு  ஒரு இடத்தை கூடுதலாக கொடுத்தால், இதற்கு முன் ஒப்பந்தம் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தங்களுக்கும் ஒரு இடம் கூடுதலாக வேண்டும் என்று உரிமை குரல் எழுப்புவார்கள். மதிமுகவோடும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்சனைகள் தான் ஏற்படும். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான்” என்கிறார்கள்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இறுதியாக என்ன முடிவெடுக்க போகிறது என்பதை அறிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் என்கிறார்கள் பாமக கூடாரத்தில்.

பாமக வட்டாரத்தில் இதுகுறித்து பேசிய போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் வேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், திமுக இரண்டு தான் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. எனவே திருமாவளவன் நிச்சயமாக போர்க் குரல் எழுப்புவார் என்று அன்புமணி எதிர்பார்க்கிறார். இன்னும் சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன்பாகவே திருமாவளவன் திமுக தலைமையை எதிர்த்து ஏதேனும் பேசுவார் என்று டாக்டர் அன்புமணி எதிர்பார்த்தார்.

அந்த அடிப்படையில் மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லலாம் என்ற யோசனை கூட அன்புமணி வட்டாரத்தில் இருந்தது. ஆனால், திருமாவளவன் சற்று நீக்குப் போக்காக இப்போது நடந்து கொண்டு வருகிறார். இருந்தாலும் விடுதலை சிறுத்தைகளின் நகர்வுகளை பாட்டாளி மக்கள் கட்சி கவனித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் திருமாவளவன் வந்தால் வரவேற்போம், வராவிட்டாலும் கவலையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதையும்  பற்றி விவாதித்திருக்கிறார் அன்புமணி.

ஒரு பக்கம் பாமகவுடன் அதிமுக பேச்சு நடத்திக் கொண்டிருந்தாலும், அன்புமணிக்கு தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது பற்றிய ரிப்போர்ட்டுகள் தமிழகம் முழுவதிலிருந்தும், குறிப்பாக வட மாவட்டங்களில் இருந்து கிடைத்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான் அன்புமணி விடுதலை சிறுத்தைகளின் முடிவை உற்று நோக்குகிறார்” என்று கூறுகிறார்கள் பாமக வட்டாரங்களில்.

எதிர் முகாமில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து கூர்மையாக காய் நகர்த்துவதுதானே அரசியல்! அன்புமணி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக