வெள்ளி, 22 மார்ச், 2024

அரவிந்த் கெஜ்ரிவால் கைது அடக்குமுறை.. சர்வதேச கண்டனம் . உலக ஊடகங்கள் விளாசல்

 tamil.oneindia.com - Halley Karthik  : நியூயார்க்: டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச ஊடகங்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளன.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டிருந்தது. எனவே வழக்கின் விசாரணைக்காக தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால், கெஜ்ரிவால் எதற்கும் பிடி கொடுக்காமல் பறந்து வந்தார். மறுபுறம் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கிக்கொண்டே வந்தது.


International media have written news about Arvind Kejriwal s arrest from various angles
இறுதியாக நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த ரெய்டில், கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த இரண்டு மாதங்களில் அமலாக்கத்துறை இரண்டு முதலமைச்சர்களை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரத்தை சர்வதேச மீடியாக்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளன. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'தி வாஷிங்டன் போஸ்ட்', "எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறையின் ஒரு பகுதியாக டெல்லி முதலமைச்சரை இந்திய (மத்திய) அரசு கைது செய்திருக்கிறது. அரசியல் போட்டியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க, மோடி தலைமையிலான மத்திய அரசு புலனாய்வு/விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன" என்று கூறியுள்ளது.

மற்றொரு சர்வதேச ஊடகமான பிபிசி, "அரவிந்த் கெஜ்ரிவால்: ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்" என்கிற தலைப்பில் செய்தியை எழுதியுள்ளது. அதில், "மோடி பயப்படுகிறார். இன்று கெஜ்ரிவாலை கைது செய்துவிட முடியும். ஆனால், அவரது எண்ணங்களை எதுவும் செய்ய முடியாது. மோடியின் அரசாங்கத்தின் அநீதியான கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான திலீப் பாண்டே கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு செய்தி ஊடகமான நியூார்க் டைம்ஸ், "இந்திய எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன" என்கிற தலைப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், "இந்த நடவடிக்கை மோடி அரசின் அழுத்தத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளுக்கு இந்த நடவடிக்கை பயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக