ஞாயிறு, 10 மார்ச், 2024

காங்கிரஸையும் தி.மு.க.வையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது” - கே.சி. வேணுகோபால்

நக்கீரன் :நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பான கையெழுத்தான பின்னர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிக்காக காங்கிரஸ் பாடுபடும். தமிழகம் நாட்டிற்கே முன் மாதிரியாக விளங்குகிறது. பிரித்தாளும் கொள்கை, ஏழை மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்ட அரசு வீழ்ச்சி அடைய வேண்டும். தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நல்ல நட்புறவில் உள்ளது. காங்கிரஸ், திமுக இடையேயான பிணைப்பு மாறாமல் அப்படியே உள்ளது. தற்போது அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு கவிழும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக