செவ்வாய், 19 மார்ச், 2024

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள்- உத்தேச பட்டியல்!

 tamil.asianetnews.com -Ajmal Khan  : தமிழக்தில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனையடுத்து பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. அந்த வகையில் வட மாவட்டங்களில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து தொகுதிகளையும் அறிவித்து விட்டது. இதனையடுத்து இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிடப்படவுள்ளது

.

ஆனால் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணிகளை இன்னும் முடிவு செய்யாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக பாமக மற்றும் தேமுதிகவின் இரட்டை நிலைப்பாடே காரணமாக இருந்து வந்தது. தற்போது இந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில் தேமுதிகவிற்கு அதிமுகவில் 4 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாமக போட்டியிடவுள்ள தொகுதிகள் என்ன.?
இதனையடுத்து தேமுதிக சார்பாக விருப்ப மனு பெறும் பணியானது தொடங்கியுள்ளது. எனவே இன்றோ அல்லது நாளையோ அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவுள்ளது. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவிடன் கூட்டணி பேரம் பேசிய பாமக ஒரு வழியாக பாஜக பக்கம் சென்றுள்ளது. பாமகவிற்கு 10 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியானது கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் தர்மபுரி, கடலூர், விழுப்புரம் (தனி) சிதம்பரம் (தனி) ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர்,சேலம், மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் அல்லது தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி உறுதியானதையடுத்து சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ள பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பங்கேற்கவுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக